ராஜபக்சே மலேசியா வருகை – மலேசியாவுக்கான இலங்கைத் தூதருக்கு அடி – உதை! (வீடியோ)

ராஜபக்சே மலேசியா வருகை - மலேசியாவுக்கான இலங்கைத் தூதருக்கு அடி - உதை! (வீடியோ)

ராஜபக்சே மலேசியா வருகை – மலேசியாவுக்கான இலங்கைத் தூதருக்கு அடி – உதை! (வீடியோ)

மலேசியாவுக்கான இலங்கைத் தூதர் தாக்கப்பட்ட சம்பவம் மீதான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்.

இலங்கை மீது அதிருப்தியும் கோபமும் கொண்டிருக்கும் தரப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அண்மையில் புத்ரா உலக வாணிக மையத்தில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே கலந்து கொள்வதைக் கண்டித்து பல தரப்பினர் ஆர்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

மலேசிய இந்தியர்களின் உணர்வுகளையும் கருத்துக்களையும் பிரதிபலிக்கும் வகையில் ராஜபக்சேவிற்கு எதிராக தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் என பல தரப்பு தெரிவித்த பலத்த கண்டனம் கண்டும் காணாதது போல் அலட்சியம் செய்யப்பட்டது.

கடும் எதிர்ப்பையும் மீறி, தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற அந்த மாநாட்டில் முக்கிய உரை ஆற்றியதும், அதன் பின் நாட்டின் சில இடங்களுக்கு வருகையளித்து பௌத்த பிக்குகள் உட்பட குறிப்பிட்ட சில தரப்புடன் சந்திப்பு நடத்தியதும் மலேசிய இந்தியர்களின் முகத்தில் கரி பூசப்பட்டதற்கு ஒப்பானது.

ஒட்டு மொத்தமாக இந்தியர்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் கால் தூசிக்கு கூட மதிக்காத தலைமைத்துவத்தின் உண்மையான முகத்திரையை கிழித்துக் காட்டியுள்ளது இந்தச் சம்பவம்.

இதில் வேடிக்கை என்னவெனில், இந்திய சமூகத்திற்கு ஆதரவாக இருப்பர் என நம்பி மக்கள் தேர்ந்தெடுத்த சமூக தலைவர், தங்களுக்கு இது குறித்து ஏதும் தெரியாது என நாடகம் ஆடியதுதான்.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என ம.இ.கா.விலிருந்து ஒரு சிலர் மட்டும் நாடகமாடினர். பின்னர், காணாமல் போயினர். ம.இ.கா. மட்டுமல்ல. மலேசியாவில் இந்தியர்களைப் பிரதிபலிப்பதாக கூறிவரும் அரசியல் கட்சிகள் எல்லாம் இவ்விவகாரத்தில் வாயை மூடிக் கொண்டிருந்தது ஏமாற்றம் தான்.

அரசியல் கட்சிகளையும் காலத்திற்கு தகுந்தவாறு பேசி காரியம் சாதிக்கும் அரசியல்வாதிகளையும் நம்பி இனி ஒன்றும் ஆகப் போவதில்லை என உணர்ந்த சில அரசாங்க சார்பற்ற அமைப்புக்கள் மட்டுமே இன்று மட்டும் ராஜபக்சேவின் வருகை குறித்து விளக்கம் கோரி வருகின்றன. ஏனைய தரப்புக்கள் அத்தகைய சம்பவம் நிகழ்ந்ததற்கான சுவடே இல்லாமல் காலம் கடத்தி வருகின்றன.

இந்நிலையில், மலேசியாவுக்கான இலங்கைத் தூதர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்புக்கும் முடிச்சு போடப்பட்டுள்ளது.

ராஜபக்சே வருகையை கண்டித்த தரப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனும் கோணத்திலும் போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

மலேசியாவுக்கான இலங்கைத் தூதர் இப்ராஹிம் அன்சார் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டதை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் அபு பக்கார் உறுதிபடுத்தினார்.

அடையாளம் தெரியாத கும்பலால் அவர் தாக்கப்பட்டதாக இலங்கை வெளியுறவு அமைச்சு அதன் அகப்பக்கத்தில் தெரிவித்திருந்தது.

தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்த அரச மலேசிய போலீஸ் படை கோலாலம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் ஒத்துழைக்கும் என்றும் காலிட் உறுதியளித்தார்.

முன்னதாக, ராஜபக்சே வருகையளிக்க திட்டமிட்டிருந்த கோவில் மீது அவரது எதிர்ப்பாளர்கள் தாக்குதல் நடத்தியதாக இலங்கையின் இணைய அகப்பக்கம் செய்தி வெளியிட்டது. அச்சம்பவத்தைத் தொடர்ந்து ராஜபக்சேவுக்கு மலேசிய அரசாங்கம் சிறப்பு பாதுகாப்பு வழங்கியதாகவும் தகவல் கசிந்துள்ளது.

தமிழ் இனத்தின் துரோகி என ராஜபக்சேவுக்கு எதிராக கடும் சாடல்களும் குற்றச்சாட்டுகளும் கண்டனங்களும் வலுத்திருந்த நிலையில், அரசாங்கம் அவை அனைத்தையும் பொருட்படுத்தாது அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கியிருப்பது, மலேசிய இந்தியர்களை அவமதித்ததற்கு சமம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

இந்த தாக்குதலின் பின்னணியாக செயல்பட்ட தரப்பு, மலேசியாவுக்கான இலங்கைத் தூதரைத் தாக்கியிருக்கலாம் என போலீஸ் தற்போது சந்தேகிக்கிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: