சிங்கப்பூரின் தமிழரும், மேனாள் அதிபருமான திரு. S R நாதன் காலமானார்!

s_r_nathanசிங்கப்பூரின் மேனாள் அதிபர் திரு. S R நாதன் காலமானார். அவருக்கு வயது 92. சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை அதனைத் உறுதி செய்துள்ளது.

திரு. நாதனின் மறைவு குறித்துப் பிரதமரும் அமைச்சரவை உறுப்பினர்களும் வருத்தமடைவதாகவும் அவருடைய குடும்பத்தாருக்குத் தங்களுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் சிங்கப்பூர் நேரம், இன்றிரவு மணி 9.48க்கு அவரின் உயிர் பிரிந்தது. பொதுமக்கள் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள், இறுதிச் சடங்கு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 31ஆம் தேதி, சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் திரு. நாதன் சேர்க்கப்பட்டார்.

சிங்கப்பூரில் நீண்ட காலம் அதிபராக இருந்தவர் அவர். ஆறாவது அதிபரான திரு. நாதன், 1999ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை இரு தவணைக் காலத்துக்குப் பொறுப்பில் இருந்தார். மூன்றாம் தவணைக் காலத்துக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அப்பொழுது அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி அதிகாரபூர்வமாகப் பதவியிலிருந்து விலகினார், திரு. நாதன். அவருக்கு அடுத்து, டாக்டர் டோனி டான் கெங் யாம், அதிபரானார்.

திரு. நாதன் பதவி விலகிய பின்னர், தென்கிழக்காசிய ஆய்வுக் கழகத்திலும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திலும் மேன்மைக்குரிய மூத்த ஆய்வாளராகப் பொறுப்பேற்றார்.

அதிபராவதற்கு முன்னர், பொதுச் சேவை, பாதுகாப்பு, உளவு, வெளியுறவுத் துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தார். 1988ஆம் ஆண்டு, மலேசியாவுக்கான சிங்கப்பூரின் தூதரானார். 1990 முதல் 1996 வரை, அமெரிக்காவுக்கான சிங்கப்பூரின் தூதராக இருந்தார், திரு. நாதன்.

சிங்கப்பூரின் கௌரவத் தூதராகவும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகவும் அவர் சேவையாற்றியுள்ளார்.

திரு. நாதன், தமது மனைவியையும் மகளையும் மகனையும் மூன்று பேரப் பிள்ளைகளையும் விட்டுச் செல்கிறார்.

Tags: 
%d bloggers like this: