`தாளாற்றித் தந்த பொருளெல்லாம்…!’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!

`தாளாற்றித் தந்த பொருளெல்லாம்…!’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!

தாய்லாந்தில், ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பாங்காக்கில் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் ‘சவஸ்தி மோடி’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சவஸ்தி என்பது வாழ்த்துகள் மற்றும் நன்றி தெரிவிப்பதற்காக தாய்லாந்து மக்கள் பயன்படுத்தும் சொல்லாகும். நிகழ்ச்சியில் இந்தியர்கள் முன் பேசுவதற்கு முன்னதாக தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார் மோடி. பின்னர், `வணக்கம்’ எனத் தமிழிலும் பல்வேறு மொழிகளிலும் இந்தியர்களுக்கு வணக்கம் கூறி உரையைத் தொடங்கியவர், “எங்கிருந்தாலும் நீங்கள் இந்தியர்களே. இன்று நான் ஒரு அந்நிய தேசத்தில் இருப்பதைப்போல் உணரவில்லை. சுற்றுப்புறம், உடை என இங்குள்ள அனைத்தும் என்னை வீட்டில் இருப்பதைப்போல் உணர வைக்கின்றன.

இளவரசி மகா சக்ரி சிரிந்தோர்ன் சம்ஸ்கிருத மொழியில் நிபுணர் மட்டுமல்லர் இந்திய கலாசாரத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். இந்தியா – தாய்லாந்து உறவு எந்தவொரு குறிப்பிட்ட அரசாங்கத்தாலும் அல்ல. இந்த உறவுக்கு எந்த ஒரு அரசாங்கத்துக்கும் வரவு வைக்க முடியாது. கடந்த காலத்தில் இரு நாடுகளுக்கிடையில் பகிரப்பட்ட ஒவ்வொரு நொடியும் இந்த உறவை உருவாக்கி பலப்படுத்தியுள்ளது. இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை திறக்கப்பட்டதும், நம் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற இணைப்பு இருக்கும். இந்தியாவின் வடகிழக்கு தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாறுகிறது.

அடைய முடியாததாகத் தோன்றும் இலக்குகளை அடைவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாட்டில் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் மூல காரணங்களில் ஒன்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவை எனது அரசாங்கம் எடுத்துள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த நாள்களில் ஒரு இந்தியர் ஏதாவது சொல்லும்போது, உலகம் உன்னிப்பாகக் கேட்கிறது. இதை நீங்கள் தாய்லாந்திலும் பார்த்திருக்க முடியும். என்றவர்,

`தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு’

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். `தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்த்தது என்று எண்ணல் வேண்டும்’. இதுவே மோடி கூறிய குறளின் பொருள். காஷ்மீர் குறித்த மோடியின் பேச்சுக்கு அரங்கில் இருந்தவர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: