கொரோனா வைரஸ் : மலேசியாவில் 4,000 பேருக்கு பாதிப்பு : வெளியே சுற்றினால் அபராதம்!

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேவேளையில் இன்று ஒரே நாளில் புதிதாக நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கையை விட தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷாம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 4,119ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 156 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 166 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று உள்ள 2,567 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

“மலேசியாவில் இதுவரை 1,487 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த நோயாளிகளில் 36 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர் என்பது நல்ல தகவல். மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 22 நாட்கள் ஆகிறது. இந்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விரைவில் தெரியவரும்” என நூர் இஷாம் தெரிவித்தார்.

வரும் 10ஆம் தேதி மலேசிய அரசு இது தொடர்பாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“போரில் வெற்றி பெறவில்லை என்றாலும், மலேசியா இன்னும் தோற்றுவிடவில்லை”
“கோவிட் 19 நோய்க்கு எதிரான போரில் நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. அதேசமயம் மலேசியா இன்னும் தோற்றுவிடவில்லை” என்றார் நூர் இஷாம்.

ஒவ்வொரு நாளும் புதிதாக நோய்த்தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை, குணமடைபவர்களின் எண்ணிக்கை, நோய்த்தொற்று எவ்வாறு பரவுகிறது எனப் பல்வேறு விஷயங்களைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். எந்த மாநிலம், எந்த மாவட்டம் அதிகமாக பாதிக்கப்படுகிறது என்பதும் கவனிக்கப்படுகிறது.

“இதுவரை நோய்த்தொற்று அதிவேகமாகப் பரவவில்லை. எனவேதான் இந்தப் போரில் நாம் வெற்றி பெறவில்லை என்றாலும் நாம் தோல்வி அடையவில்லை எனக் குறிப்பிடுகிறேன்,” என்றார் நூர் இஷாம்.

பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வருமா? என்று செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இது தொடர்பான தனது கருத்து எதையும் முடிவு செய்யாது என்றார்.

அதன்பின்னர் சுகாதார அமைச்சு தனது பரிந்துரையை மத்திய அமைச்சரவைக்கும் பிரதமருக்கும் தெரிவிக்கும் என்று குறிப்பிட்ட அவர், அதன்பிறகு அமைச்சரவை இறுதி முடிவெடுக்கும் என்றார்.

மலேசியாவில் மார்ச் 18ஆம் தேதி முதல் பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்தது. மார்ச் 31ஆம் தேதி வரை இந்த ஆணை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் இது ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

மருத்துவ ஊழியர்கள் 180 பேருக்கு கிருமித்தொற்று பாதிப்பு
இதற்கிடையே மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக போராடி வரும் மருத்துவ ஊழியர்கள் 180 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் நோயாளிகளைக் கையாண்டபோது மருத்துவ ஊழியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுவது சரியல்ல என்று அந்த அமைச்சு கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 122 பேருக்கு நோய்த்தொற்று மருத்துவமனைக்கு வெளியேதான் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ள சுகதார அமைச்சின் பொது ஆணையர் நூர் இஷாம், திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் மூலம் கூட நோய்த்தொற்று பரவியதாகச் சுட்டிக்காட்டினார்.

சுமார் 20 விழுக்காடு ஊழியர்களுக்கு மருத்துவமனையிலும், 80 விழுக்காட்டினருக்கு மருத்துவமனைக்கு வெளியிலும்தான் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் மக்களின் உயிரைக் காக்க போராடி வரும் மருத்துவ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மலேசிய அரசு தவறிவிட்டதாக ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தனியார் மருத்துவர் ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்ட விவரங்களை நூர் இஷாம் தெரிவித்தார்.

மேலும் இதுவரை 2 ஆயிரம் மருத்துவ ஊழியர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசு ஆணையை மீறினால் ஆயிரம் ரிங்கிட் அபராதம் – இதற்கிடையே பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறி வெளியே செல்வோருக்கு இன்று முதல் 1000 மலேசிய ரிங்கிட் (உத்தேசமாக ரூ.17,500) அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க வெளியே வந்த இருவருக்கு மலேசிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுவோருக்கு சிறைத்தண்டனை அளிக்கக்கூடாது என ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சிறைச்சாலைகளில் தேவையின்றி கூட்ட நெரிசல் ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். இதையடுத்து சிறைத் தண்டனைக்குப் பதிலாக சமூகப் பணிகளை ஆற்றும்படி பிடிபட்டவர்களுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வருகின்றன.

தேவையின்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு 1000 மலேசிய ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என மலேசிய பொது பாதுகாப்பு போலிஸ் பிரிவின் இயக்குநர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார். தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த அபராதம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய வழியில்லை என்றும் வேண்டுமானால் நீதிமன்ற விசாரணைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தில் இருக்கும் வேளையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல அனுமதி இல்லை. அரசின் உத்தரவை மீறுபவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது 1000 மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“இந்தக் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யும் நபர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும். அரசு உத்தரவுக்கு மக்கள் கீழ்ப்படிவதை உறுதிசெய்ய குடியிருப்பு பகுதிகளில் காவல்துறை ரோந்துப்பணி அதிகரிக்கப்பட்டுள்ளது,” என்றார் அப்துல்லா சானி.

எனினும் இப்போதும் கூட காலை வேளையில் சிலர் மெதுவோட்டமும் நடைப்பயிற்சியும் மேற்கொள்வதைக் காணமுடிவதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகையவர்கள் தடுத்து வைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

– பிபிசி தமிழுக்காக

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: