பத்துமலை (Batu Caves, Malaysia) – மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில்!

Lord_Muruga_Batu_Cavesபத்துமலை (Batu Caves), என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ள இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் (மலாய்: Sungai Batu; ஆங்கிலம்: Batu River) பெயரிலிருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. முருகப் பெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

ஒரு காலத்தில் ஓர் ஒற்றையடிப் பாதையில் சென்று மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் மாறி இன்று உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது பத்துமலை திருத்தலம். பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய கே.தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு இந்தப் பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது.

வரலாறு
1860 ஆண்டுகளில் பத்துமலைப் பகுதிகளில் வாழ்ந்த சீனர்கள் காய்கறி பயிரிட்டு வந்தனர். அவர்களுடைய விவசாயத்திற்கு உரம் தேவைப்பட்டது. ஆகவே, அவர்கள் பத்துமலைக் குகைகளிலிருந்து வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதற்கு முன்னர் இந்தக் குகைகளில் தெமுவான் எனும் மலேசியப் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இவர்களும் பத்துமலையைத் தங்களின் புனிதத் தலமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அமெரிக்க தாவரவியலாளர்
1878-இல் பத்துமலைப் பகுதிகளில் இருந்த சுண்ணாம்புக் குன்றுகளை ஆய்வு செய்த அமெரிக்க தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே என்பவர் பத்துமலையைப் பற்றி வெளியுலகத்திற்கு அறிவித்தார். பத்துமலையின் பெயர் புகழடைந்தது.அதன் பின்னர் 14 ஆண்டுகள் கழித்து 1891-இல் தம்புசாமிப் பிள்ளை அங்கு ஒரு கோயிலைக் கட்டினார். பத்துமலைக் கோயிலின் நுழைவாயில் ஒரு வேல் வடிவத்தில் இருந்தது அவரைப் பெரிதும் கவர்ந்தது.

1892-இல் பத்துமலையில் முதல் தைப்பூசம்
பத்துமலைக் கோயில் முருகப் பெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. அதற்கு முன்னர் 1890-இல் தம்புசாமிப் பிள்ளை கோலாலம்பூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலைத் தோற்றுவித்தார். 1891-இல் பத்துமலையின் குகைக்கோயிலில் ஸ்ரீ சுப்ரமணியர் சிலையை நிலைநாட்டினார். 1892-இல் இருந்து பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1920-இல் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப்பட்டன. குகைக் கோயில் 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

இராமாயண குகை
பத்துமலையின் அடிவாரத்தில் கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென இரு குகைக்கோயில்கள் உள்ளன. இந்தக் குகை மையங்கள் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன. அவற்றில் முருகக் கடவுள் சூரவதம் செய்யும் காட்சிகள் அருங்கலை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. பத்துமலையின் ஆக இடது புறத்தில் இராமாயண குகை உள்ளது. இந்த இராமாயண குகைக்குச் செல்லும் வழியில் 50 அடி உயரம் உள்ள ஓர் அனுமார் சிலையைக் காண முடியும். அனுமாரை குலதெய்வமாக வழிபடுவோருக்காக அங்கே ஒரு கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோயில் நவம்பர் 2001-இல் திறப்புவிழா கண்டது. இராமாயண குகையில் இராமரின் வாழ்க்கைத் தத்துவங்கள் அழகான ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

உலகின் உயரமான முருகன் சிலை
உலகிலேயே உயரமான முருகன் சிலை பத்துமலையில் தான் உள்ளது. இதன் உயரம் 42.7 மீட்டர் (140அடி). இதை உருவாக்குவதற்கு மூன்று ஆண்டுகள் பிடித்தன. கட்டுமானச் செலவு 25 இலட்சம் மலேசிய ரிங்கிட். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புனிதத் திறப்புவிழா செய்தார்கள். இந்தச் சிலையின் திறப்பு விழாவின் போது அதற்கு 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான சாமந்திப் பூ மாலை சூட்டப்பட்டது. அந்த மாலை சுமார் ஒரு டன் எடை. அதனால், பளு தூக்கும் இயந்திரத்தின் உதவியோடு அந்த மாலை முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது.

பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் கோவிலின் கலை ஓவியத்தை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய முயற்சி நடந்து வருகிறது. [6]இந்தச் சிலை ஏற்கனவே மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சிலையை உருவாக்குவதற்கு 1,550 கன மீட்டர் பைஞ்சுதை (cement), 250 டன் எஃகு கம்பிகள், தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டன.

300 லிட்டர் தங்கக் கலவை
தமிழ்நாடு, திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர்.தியாகராஜன் தலைமையில் முருகன் சிலை உருவாக்கம் கண்டது. அவருக்கு உதவியாக 14 சிற்பிகள் பணி புரிந்தனர். சிற்பி ஆர்.தியாகராஜன் மலேசியாவில் பல ஆலய நிர்மாணிப்புகளுக்கு உதவியாக இருந்திருக்கிறார். செபாராங் பிறை, தாசேக் குளுகோர், மாரியம்மன் ஆலயம், பத்துமலை மீனாட்சி அம்மன் சிலை, பத்துமலை ஆஞ்சநேயர் சிலை, கோலாலம்பூர், ஜாலான் புடு, கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் போன்றவை அவரின் கைவண்ணங்களே.

இந்தச் சிலை உலகின் பார்வையை தற்போது மலேசியாவின் பக்கம் திருப்பியுள்ளது. உலகிலேயே மிக உயரமான சிலை என்ற சிறப்பினையும் இந்தச் சிலை பெற்றுள்ளது. இந்த சிலையைக் காண்பதற்காகவே 2012ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ சுப்ரமணியர் கோவில்
பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் நிர்வாகத்தை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் கவனித்து வருகிறது. இந்தத் தேவஸ்தானம் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு சமய அற நிறுவனமாகும். இது கோலாலம்பூர், ஜாலான் துன் எச்.எஸ்.லீ எனும் முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இந்து அமைப்புகளில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் தான் மிக மிகப் பழமையானது, மிகவும் பண வசதி படைத்தது. இதன் தலைவர் டத்தோ ஆர். நடராஜா என்பவராவார்

பத்துமலைக்கு செல்லும் காவடிகள்.
பத்துமலை சுண்ணாம்புக் குகைகளில் பல்வேறு தனித்தன்மை வாய்ந்த தாவரங்களும் விலங்கினங்களும் காணப்படுகின்றன. இந்தச் சுண்ணாம்புக் குகைகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்பதால் இங்கு காணப்படும் சிறுரக விலங்குகளும் சற்று மாறுபட்டு உள்ளன. அதற்கு Liphistiidae ரக சிலந்திகளையும் அல்லது ரக வௌவால்களையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இங்குள்ள மாக்காவ் குரங்குகள் பத்துமலையைச் சுற்றிப் பார்க்க வருபவர்களிடையே மிகவும் புகழ் பெற்றவை. மனிதர்களுடம் இவை மிக நெருக்கமாகப் பழகுகின்றன. அந்த நெருக்கத்தில் சுற்றுப்பயணிகளை, குறிப்பாகச் சிறுவர்களை அக்குரங்குகள் சில சமயங்களில் கடித்து விடுவதும் உண்டு.

ஊசிப்பாறைகளும் சுண்ணக்கல் புற்றுகளும்
குகைக் கோயிலுக்குக் கீழே இருண்ட குகை உள்ளது. மலேசியாவில் வேறு எங்கும் இல்லாத சில அரிதான விலங்குகள் இங்கு காணப்படுகின்றன. அந்த இருண்ட குகையில் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்ட நிலக்குடைவுகள் இருக்கின்றன. குகைகளின் உட்கூரையில் தொங்கும் ஊசிப்பாறைகளும் குகைத் தரையில் சுண்ணக்கல் புற்றுகளையும் ஆயிரக்கணக்கில் காண முடிகின்றது.

இந்த ஊசிப்பாறைகளும், சுண்ணக்கல் புற்றுகளும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் குகைத் திரைகள், குகை முத்துக்கள், இரட்டை வழிச் சோழிகள் போன்றவற்றை உருவாக்கி வருகின்றன. பத்துமலைக் குகைகளின் சூழலியலைப் பாதுகாக்கும் பொருட்டு இருண்ட குகையின் உள்ளே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், மலேசிய இயற்கை கழகம் அவ்வப்போது சிறப்பு கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கின்றது.

மேம்பாட்டுத் திட்டங்கள்
1970ஆம் ஆண்டு தொடங்கி பத்துமலையின் சுற்று வட்டாரங்களில் நிறைய வீடமைப்புத் திட்டங்கள் உருவாகி விட்டன. கடந்த ஒரு பத்தாண்டில், பத்துமலையின் அருகாமையில் இருந்த சிறு சிறு கிராமங்கள் அப்புறப் படுத்தப்பட்டன. அங்கே பல புதிய தொழில்சாலைகள் உருவாக்கப்பட்டன. கடைகள், பெருங்கடைகள், பேரங்காடிகள் என்று நிறைய வந்துவிட்டன. தாமான் பத்து கேவ்ஸ், தாமான் செலாயாங், தாமான் அமானியா, தாமான் ஸ்ரீ செலாயாங், தாமான் மேடான் பத்து கேவ்ஸ் போன்ற புதிய வீடமைப்புப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பத்துமலையின் சுற்று வட்டாரங்களில் புதிய புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டால் அவை பத்துமலையின் இயற்கைத் தன்மையைப் பாதிக்கும் என்று மலேசிய இயற்கைக் கழகம் எச்சரிக்கை செய்துள்ளது. பொதுமக்களின் பொழுதுபோக்குத் தளமாக அமைந்திருக்கும் பத்துமலையில் அடர்த்தியான மேம்பாட்டுத் திட்டங்கள் இருக்கக் கூடாது என்று அக்கழகம் கவலை தெரிவிக்கின்றது.

தொங்கூர்தி திட்டம் – Cable Car
2010 ஜூலை மாதம் பத்துமலையிலிருந்து செந்தூலுக்கு 520 மில்லியன் ரிங்கிட் செலவில் புதிய விரைவு தொடர்வண்டிச் சேவை தொடங்கப்பட்டது. அந்தச் சேவையை மலாயா ரயில்வே நிறுவனம் நடத்துகிறது. இந்த 2012ஆம் ஆண்டில் 10 மில்லியன் ரிங்கிட் செலவில் பத்துமலையில் தொங்கூர்தி (Cable Car) திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>