ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனார் சுந்தர் பிச்சை!

ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனார் சுந்தர் பிச்சை!

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தற்போது அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டபோதே ஒட்டுமொத்த உலகமும் அவரை வியந்து பார்த்தது. தற்போது அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கூகுளின் இணை நிறுவனர் லாரி பேஜ் ஆல்பாபெட்டின் சி.இ.ஓ ஆக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கூகுளின் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோர் தொடர்ச்சியாக இணை நிறுவனர்களாகவும், பங்குதாரர்களாகவும், ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்களாகவும் தங்களின் பங்களிப்பை தொடர்ந்து வழங்குவார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரன் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நிறுவனத்தை இன்னும் திறம்படச் செயல்பட வைக்க வழிகள் இருக்கும்போது நாங்களே அதைக் கையில் வைத்திருக்க என்றுமே நினைத்தது கிடையாது. சுந்தர் பிச்சை, நமது பயனாளர்கள், ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் தொழில்நுட்பம் தொடர்பான ஆர்வத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார். கூகுளையும் ஆல்பாபெட் நிறுவனத்தையும் இவரை விட எவராலும் சிறப்பாக வழிநடத்திட முடியாது” எனத் தெரிவித்துள்ளனர்.

ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக நியமிக்கப்பட்டது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, “தொழில்நுட்பத்தின் மூலம் பெரிய சவால்களைச் சமாளிப்பதில் ஆல்பாபெட்டின் நீண்ட கால கவனம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். லாரி பேஜ் மற்றும் செர்ஜிக்கு எனது நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆல்பாபெட் நிறுவனம் 2015 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தானியங்கி கார், ஸ்மார்ட் சிட்டி முதலிய திட்டங்ளைச் செய்யவும் கூகுள் ஆல்பாபெட் நிறுவனம் என்னும் குடையின் கீழ் சுதந்திரமாகச் செயலாற்றவும் ஆல்பாபெட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளில் கூகுள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டின்போதும் விசாரணையின் போதும் சுந்தர் பிச்சை ஆஜராகி விளக்கமளித்து வந்தார்.

சமீபகாலங்களில் ஆல்பாபெட் நிறுவனம் உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 2018 -ம் ஆண்டில் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லாபம் கண்டுள்ளது. ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக அறிவிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சைக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: