`நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள்!’ – அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்குத் தடை!

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது வடக்கு பிராந்தியத்தின் ராணுவப் படைக்குத் தலைமை தாங்கியவர் ஷவேந்திர சில்வா. அந்தப் போரில் நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக சில்வா மீது ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அந்தப் போரின்போது தான் தலைமை வகித்த பகுதியில் இருக்கும் சாதாரண மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் போன்றவற்றைக் கொண்டு செல்ல விடாமல் தடுத்ததாக சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் சில்வா இலங்கையின் மொத்த ராணுவத்துக்கும், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனத்துக்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இவரால் இலங்கைக்கு பெரும் அபாயம் நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், சில்வா மீதான போர்க் குற்றங்களை முன் வைத்து அவரையும், அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் தங்கள் நாட்டுக்குள் நுழையத் தடை விதித்துள்ளது அமெரிக்கா.

இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், `இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நீதிக்குப் புறம்பான கொலைகளில் ஈடுபட்டதால் ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலர் மைக் போம்போ தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட ஷவேந்திர சில்வா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தீவிரமானவை மற்றும் நம்பகமானவை என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. தங்கள் முடிவை அமெரிக்கா மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: