தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்! – ஹார்வர்டு ஒப்பந்தத்தில் இடம்பெறப் போவது என்ன?

தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்!  - ஹார்வர்டு ஒப்பந்தத்தில் இடம்பெறப் போவது என்ன?

தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்! – ஹார்வர்டு ஒப்பந்தத்தில் இடம்பெறப் போவது என்ன?

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முழுப் பணமும் சேர்ந்துவிட்டன. விரைவில் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளனர் தமிழ் இருக்கை ஆர்வலர்கள். ‘ சங்க இலக்கியத்தில் உள்ள மனித இயல், பொருளியல், அறிவியல், தமிழரின் கடல் வழிப்பயணம், அகழ்வாராய்ச்சி எனப் பல கூறுகள், தமிழ் இருக்கை மூலம் ஆராயப்பட இருக்கின்றன’ என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

அமெரிக்கா, பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டன. மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞான சம்பந்தன் ஆகியோர், கடந்த 2015ம் ஆண்டு தலா ஐந்து லட்சம் டாலர்களைக் கொடுத்து இந்தப் பணியைத் தொடங்கி வைத்தனர். இதன்பின்னர், தமிழ் இருக்கை அமைக்கப்படுவதற்கான கட்டாயம் குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். ஏறக்குறைய இரண்டாண்டுகளாக தொய்வில் இருந்த இந்தப் பணி, தமிழக அரசு அளித்த பத்து கோடியின் மூலம் வேகம் எடுக்கத் தொடங்கியது. தமிழ் ஆசிரியர்கள், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் எனப் பலரும் நிதியை வாரிக் கொடுத்தனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் 33 லட்ச ரூபாய் (50 ஆயிரத்து 200 டாலர்கள்) நன்கொடை அளித்தார். தமிழ் இருக்கைக்காக அதிக நன்கொடை அளித்த உலகத் தமிழர்களில் ஆறாவது இடத்தையும் இந்திய அளவில் முதலிடத்தையும் பிடித்தார் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன். திரைக் கலைஞர்களில் நடிகர் கமல்ஹாசன் 20 லட்ச ரூபாயும் நடிகர் விஷால் 5 லட்ச ரூபாயும் அளித்தனர். தி.மு.க அளித்த ஒரு கோடி ரூபாயின் மூலம் இருக்கைக்கான பணிகளில் வேகம் கூடியது. முழுத் தொகையும் சேர்ந்துவிட்டதையடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன.

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பாலச்சந்திரனிடம் பேசினோம். ” தமிழ் இருக்கைக்கான 60 லட்சம் டாலர்களும் சேர்ந்துவிட்டன. உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்து 335 தமிழர்கள் அளித்த நன்கொடைகளால் இந்தச் சாதனை நிகழ்ந்தது. மருத்துவர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகியோர் தலா 5 லட்சம் டாலர்களைக் கொடுத்துத் தொடங்கி வைத்த காரியம், இலக்கை அடையாமல் முடிவுற்றுவிடுமோ என்ற சந்தேகம் இருந்தது. இந்தப் பயணம் இலக்கை அடைந்துவிட்டது. இருவரும் சேர்ந்து அளித்த பத்து லட்சம் டாலர்களுக்குப் பிறகு ஒருவருடம் கடந்த பின்னரும் கூடுதலாக, பத்து லட்சம் டாலர்கள்தான் சேர்ந்திருந்தன. முழுத் தொகையையும் சேர்ப்பதற்கு, 2018 ஜூன் மாதம் இறுதி என நிர்ணயித்தோம். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்தத் தகவலைக் கொண்டு சேர்க்க வேண்டும் என இவ்விரு மருத்துவர்களும் முயற்சி மேற்கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தின் முயற்சியால் மிக எளிதாக இந்தக் காரியங்கள் நடந்தன. மருத்துவர்களின் வேண்டுகோளை இணைத்து முதல்வரிடம் அவர் கடிதம் கொடுத்தார்.

ஜெயலலிதாவும், ‘ தேர்தல் அறிக்கையில் ஹார்வர்டு இருக்கைக்கு நிதி அளிப்போம்’ எனக் குறிப்பிட்டார். கடிதத்தில், எஸ்.ஆர்.பி ஒரு தகவலைக் குறிப்பிட்டிருந்தார். அதாவது, ‘ தமிழக அரசு 40 லட்சம் டாலர் கொடுத்துவிட்டால், இந்தப் பிரச்னை தீர்ந்துவிடும். தமிழின் தொன்மையை உரத்த குரலில் சொல்வதற்கு ஒரு காரணமாக அமையும்’ எனத் தெரிவித்திருந்தார். இதைக் கவனித்த ஜெயலலிதா, உடனே செயல்படுத்துமாறு குறிப்பெழுதினார். இது நடந்தது 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். இதன்பிறகு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்ற ஜெயலலிதா, மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் தமிழ் இருக்கை அமைவதில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையில், உலகத் தமிழர்களின் முயற்சியால் மேலும் 10 லட்சம் டாலர்கள் வந்து சேர்ந்தன. மேலும், ’30 லட்சம் டாலர்கள் தேவை’ என்ற நிலையில், மீண்டும் அ.தி.மு.க அரசை அணுகினோம். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து வலியுறுத்தினோம்.

ஜானகிராமன்’ தமிழ் இருக்கைக்கு ஏறக்குறைய ஆறரைக் கோடி கொடுத்தால் போதும்’ என தமிழக அரசு அதிகாரிகள் கூறியபோது, ‘ 15 லட்சம் டாலர்கள் நாம் கொடுப்போம். மீதமுள்ள தொகையைத் தமிழர்கள் கொடுக்கட்டும்’ என முதல்வரிடம் அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தியதன் காரணமாக, தமிழக அரசு பத்து கோடி ரூபாய் கொடுத்தது. இந்தப் பணம் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘ தமிழக அரசு பத்து கோடி கொடுத்திருக்கிறது. இன்னும் பத்து கோடி ரூபாய்தான் தேவை’ என்ற இலக்கை நோக்கி அவர்கள் நகர்ந்தனர். அமெரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், லண்டன் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் களமிறங்கின. மொய் விருந்து அளித்து, அதன்மூலம் நிதி திரட்டப்பட்டது. 2018 ஜூனுக்குள் எட்ட வேண்டிய இலக்கினை, இதே ஆண்டு மார்ச் 10-ம் தேதிக்குள் எட்டிவிட்டோம். இதில், பிரச்னைகளும் சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. பாஸ்டன் நகரில் வசிக்கும் சிவ அய்யாத்துரை என்ற தமிழர், ஹார்வர்டு இருக்கையால் எந்த நன்மையும் இல்லை என்ற பிரசாரத்தைத் தொடங்கினார். அதே பதிவில், ‘ பச்சைத் தமிழர் சுப்ரமணியசுவாமியை அவமானப்படுத்தியது ஹார்வர்டு பல்கலைக்கழகம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது பிரசாரம் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, நன்கொடைகள் திரளத் தொடங்கின. ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முழுத் தொகையும் சேர்ந்துவிட்டது.

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு என அமெரிக்காவில் ஓர் அறக்கட்டளை செயல்படுகிறது. ஜானகிராமன், திருஞான சம்பந்தன், வைதேகி அம்மாள், சொர்ணம், குமரகுமரப்பா ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். ‘ ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ஒப்பந்தம் செய்யும்போது ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்’ என்று உலகத் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதாவது, ‘ தமிழ் இருக்கையின் மூலம், சங்கத் தமிழினை எந்த நோக்கத்துக்காக ஆராய்கிறது? சங்கத் தமிழில் எத்தனை உரிச் சொற்கள் இருக்கின்றன? கடைச் சொற்கள் இருக்கின்றன என்று பார்ப்பதற்காக அல்ல…இன்று வரை சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற அகநானூறு, புறநானூறு ஆகிய இரு விஷயங்களைப் பார்ப்பதற்காகவும் அல்ல.

காதல், வீரம், கொடை என்ற மூன்றைத் தவிர, மற்ற துறைகளில் இதுவரையில் ஆராய்ச்சிகள் நடந்ததில்லை. சங்க இலக்கியத்தில் மனித இயல், பொருளியல், அறிவியல் உள்ளிட்ட பல கூறுகள், தமிழர்கள் வாழ்வில் எத்தகைய தாக்கங்களை உருவாக்கின என்பது ஆராயப்பட வேண்டும். சங்கத் தமிழின் தொன்மை என்ன? பண்டைய தமிழின் பண்பாட்டுப் பெருமை என்ன? சங்கத் தமிழ், அகழ்வாராய்ச்சி, தமிழரின் கடல் வழிப் பயணம் போன்ற ஆதாரங்களில் இருந்து நிறுவ முடியும் என்றால், இன்று உலகில் தமிழுக்கென்று குரல் இல்லாத குறை நிவர்த்தி செய்யப்படும். எனவே, தமிழின் உண்மைத் தொன்மையை சரியான அளவில் கணக்கிட்டு உலகுக்குக் கூறும் அளவுக்கு, தமிழ் இருக்கை ஆராய்ச்சிகள் துணை புரிய வேண்டும்’ என்பதே உலகத் தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது. அந்த இலக்கை விரைவில் அடைய இருக்கிறோம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

  • விகடன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: