பழநி அருகே, கோதைமங்கலம் கிராமத்தில், முருகக் கடவுளை வாழ்த்தும் காவடிப்பாட்டுகள் அடங்கிய, 300 ஆண்டுகள் பழமையான, ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு மாணவி, யுவராணி, தன் வீட்டில் பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளதாக, வரலாற்று ஆசிரியர், ராஜேஸ்வரி, வரலாற்று ஆய்வாளர் தமிழாசிரியர் நந்திவர்மன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள், ஓலைச்சுவடியை ஆய்வு செய்தபோது, 300 ஆண்டுகளுக்கு முந்தையது என, தெரியவந்துள்ளது.
அதில், இரண்டு பக்கங்களிலும் பழநி மலை முருகனை பற்றி, காவடிசிந்தாக, 100 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.இது குறித்து ஆய்வாளர் நந்திவர்மன் கூறியதாவது:தங்களது தாத்தா காலத்தில் இருந்து வீட்டில் ஓலைச்சுவடிகள் உள்ளதாக மாணவி தெரிவித்தார். அதை ஆராய்ந்தபோது, ஓர் அடி நீளமும், 4 செ.மீ., அகலம் கொண்டதாக உள்ளது. 50 சுவடிகளில் பழநி மலை முருகன் மேல், ‘காவடிச்சிந்தாக பாடல் எழுதப்பட்டுள்ளது.
பாடல்கள் எளிய நடையில், முருகனின் வாழ்க்கை வரலாறு, காவடி எடுப்பதால் ஏற்படும் நன்மைகள், மனிதனுக்கு உண்டாகும் நோய்கள் பற்றியும், அந்த நோய்கள் காவடி எடுப்பதால் தீரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.பழநி மட்டுமின்றி திருச்செந்துார் முருகன் குறித்தும், 10 பாடல்கள் உள்ளன. ஓலைச்சுவடி இணைப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள பட்டன், ஆங்கிலேயர் காலத்து மன்னரின் புகைப்படம் அழிந்த நிலையில் உள்ள நாணயம் போல உள்ளது.
சந்தம், எழுத்து அமைப்பு, ஓலைச்சுவடியின் பழமை கொண்டு ஆராய்ந்ததில் 350 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளது. ஓலைச்சுவடி பாடல்களை நுாலாக வெளியிட்ட பின், பழநி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.