தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி மெயின் சாலையில் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகே உள்ளது திருவள்ளுவர் சிலை. இந்தச் சிலை சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையின் கண்ணை கறுப்பு பேப்பரை வைத்து கட்டியுள்ளனர். மேலும், முகத்தில் சாணத்தைப் பூசி அவமதிப்பு செய்துள்ளனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது, “உலகமே மதிக்கும் திருவள்ளுவரை இதுபோன்ற அவமதிப்பு செய்த மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும்” என ஆவேசமாகக் கூறினர். இதற்கு காவல் துறையினர் மர்ம நபர்களை கைது செய்வதாக உறுதி கூறினர்.
மேலும், காவல் துறையினரே திருவள்ளுவர் சிலையின் கண்ணில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு பேப்பரை எடுத்து, பின்னர் சிலையின் மீது பூசப்பட்டிருந்த சாணத்தை தண்ணீர் கொண்டு கழுவினர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.