பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு, திருக்குறள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் ஜஸ்வந்த்சிங். 1330 குறள்களுக்கும் மளமளவென விளக்க உரை சொல்கிறார். குறிப்பாக மழை, நட்பு, ஆரோக்கியம், உணவு பற்றி திருவள்ளுவர் வடித்திருக்கும் குறள்களுக்கு இயற்கையை உதாரணமாகக் காட்டி விளக்கம் தருகிறார்.
ஜஸ்வந்த்சிங் இயற்கையான உணவியல் முறைகளை கடைபிடித்து வாழ்ந்து வருபவர். இவரது வீட்டைச்சுற்றி 350 வகை மூலிகைகளை வளர்க்கிறார். அவை தரையிலும், மாடியிலும் தழைத்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் 50-க்கு மேற்பட்டவை அபூர்வ வகைகள். தமிழக அரசின் மலரான செங்காந்தள் மலரும் என் தோட்டத்தில் பூத்திருக்கிறது என்று கூறும் இந்த திருக்குறள் காதலர் வசிப்பது, சென்னை முகப்பேர் திருவள்ளுவர் நகரில்!
“எனக்கு தமிழ் ஆர்வம் அதிகம். இந்த பகுதியில் நடக்கும் இலக்கிய விழாக்களில் கலந்துகொள்வேன். அப்படித்தான் எனக்கு திருக்குறள் மீது காதல் ஏற்பட்டது. அவர் எந்த கடவுளையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தமிழர்கள் என்று எங்கும் சொல்லாமல், தமிழின் சிறப்பை உலகெங்கும் கொண்டு சென்றுவிட்டார். இது மொழி, இனம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த பொக்கிஷம். அதனால்தான் இதனை உலக பொதுமறை என்கிறோம்.
அவர் பெயரில் உருவான (திருவள்ளுவர்) நகரில் வாழ்ந்து வரும் நான், அவருக்கு எப்படி புகழ் சேர்க்கலாம் என்று யோசித்தேன். நான் அரசு அனுமதி பெற்று 16 வருடங்களுக்கு முன்பு என் வீட்டை சுற்றி சந்தன மரக்காடு உருவாக்கினேன். அதில் 200 சந்தன மரங்கள் உள்ளன. அவைகளில் 50-க்கு மேற்பட்டவைகள் முற்றி, நன்றாக வளர்ந்துவிட்டன. அதில் முற்றி வளர்ந்துள்ள 30 அடி உயர சந்தன மரத்தில் திருவள்ளுவர் சிற்பத்தை வடிக்க முயற்சித்தேன்.
அவர் உருவத்தை என் மனதில் நினைத்துக்கொண்டு பல நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக நானே, மரத்தை செதுக்கும் உளியால் சிற்பத்தை வடித்தேன். நான் நினைத்தது போல் அழகாக வந்துவிட்டது. நான் வளர்த்த சந்தன மரத்தில் நானே அவரது சிற்பத்தை வடித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. சகாப்தம் படைத்த அவரது புகழ் சந்தனம் போல் காலம் முழுக்க மணக்கவேண்டும் என்பது தான் என் ஆசை. சந்தன மர சிற்பம் ஒரு அடி உயரமும், அரை அடி அகலமும் கொண்டது. அந்த சந்தன மரத்துக்கு 16 வயது. அருகில் 35 வயது கொண்ட மாமரத்தில் 3 அடி உயரத்திலும் இரண்டரை அடி அகலத்திலும் இன்னொரு திருவள்ளுவர் சிற்பமும் வடித்துள்ளேன். சந்தன மரத்தில் செதுக்கிய கழிவுகளைக் கொண்டு ஒரு மாலையை வடிவமைத்து அதையும் திருவள்ளுவருக்கு சூட்டியிருக்கிறேன்” என்கிறார், ஜஸ்வந்த்சிங்.
“நாம் ஆரோக்கியமாக வாழ இயற்கை எவ்வளவோ வளங்களை நமக்கு தந்திருக்கிறது. ஆனால் நாம் அவைகளை பயன்படுத்துவதில்லை. மிக எளிதாக கீரை வளர்த்து அதை சாப்பிட்டு நாம் முழு ஆரோக்கியத்துடன் வாழலாம். நமது வீட்டை சுற்றியோ, மாடியிலோ இயற்கை முறையில் காய்கறி வளர்த்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். ஆனால் நாம் இயற்கையை மதிக்காமல் இன்னலுக்கு உள்ளாகிறோம். இயற்கையை பாதுகாத்து, போற்றி, வளர்த்து, அதன் பலனை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. திருவள்ளுவர் சிற்பம் மூலம் இந்த கருத்தையும் நான் வலியுறுத்துகிறேன்” என்றார், ஜஸ்வந்த்சிங்.