30 நாட்களில் 1,121 பண்ணை குளங்கள் அமைத்து திருவண்ணாமலை மாவட்டம் உலக சாதனை படைத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலத்தில் மிகுந்த வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படும். இதற்கு தீர்வு காணும் வகையில் மழை நீரை தேக்கிவைத்து உபயோகிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பணியாளர்களை ஈடுபடுத்தி, மாவட்டம் முழுவதும் 1,121 பண்ணை குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குளங்கள் அனைத்தும் 30 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மழைநீரை தேக்கி வைத்து உபயோகிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த பண்ணை குளம் 72 அடி நீளம், 36 அடி அகலம், 5 அடி ஆழமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற பணிகள் செய்யப்படவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் 541 ஊராட்சியில் 30 நாட்களில் அமைக்கப்பட்ட பண்ணை குளத்தினை 11 குழுக்களாக பிரிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நன்றி : தினகரன்