தமிழ்நாட்டின் முதல் திருநங்கை மைக்ரோபயாலஜிஸ்ட் நேயா!

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை மைக்ரோபயாலஜிஸ்ட் நேயா!

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை மைக்ரோபயாலஜிஸ்ட் நேயா!

“எவ்வளவு பணக்கஷ்டம் வந்தாலும் பிச்சையெடுக்கக் கூடாது, பாலியல் தொழில் செய்யக் கூடாது, வீட்டைவிட்டு வெளியே வந்து சக திருநங்கைகளோடு தங்க ஆரம்பிச்ச அன்னைக்கு நான் எடுத்த தீர்க்கமான முடிவு இது. அந்த உறுதியான எண்ணம்தான் எல்லாப் பிரச்னைகளையும் கடந்து என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கு” தன் பரபரப்பான வேலைக்கிடையில் நேரம் ஒதுக்கிப் பேச ஆரம்பித்தார் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை மைக்ரோபயாலஜிஸ்ட் நேயா.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவரும் ரத்த வங்கியில் லேப் டெக்னீஷியனாகப் பணியமர்த்தப்பட்டிருக்கிறார் நேயா. 2014-ம் ஆண்டிலிருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில், பணிபுரிந்து வந்தாலும் அவரின் தகுதிக்கும் திறமைக்கும் படிப்புக்கும் ஏற்ற வேலை தற்போதுதான் அவருக்குக் கிடைத்திருக்கிறது. சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட நேயா, நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்போது பாக்டீரியாக்களைப் பற்றி ஆராய்ச்சி (பிஹெச்.டி) மேற்கொண்டு வருகிறார்.

தான் கடந்துவந்த பாதையைப் பற்றியும், அடையவேண்டிய லட்சியங்களைப் பற்றியும் தோழமையோடு நம்மிடையே பேசினார் நேயா.

“சேலத்துக்குப் பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல பிறந்தவ நான். ஒரு அக்கா, ஒரு அண்ணன். அப்பா, அம்மா ரெண்டுபேருமே அரசு ஊழியர்கள். நான் பத்தாவது படிக்கும்போதே ரெண்டுபேரும் இறந்துட்டாங்க. அவங்க உயிரோட இருக்குற வரைக்கும் என் வாழ்க்கையில எந்தப் பிரச்னையும் இல்லை. இறந்ததும் என் வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு.

அம்மாவுக்கு கேன்சர். ஒரு வருஷம் ஆஸ்பத்திரியிலவெச்சுப் பார்த்துக்கிட்டோம். ஸ்கூல் போற நேரம் தவிர மத்த நேரமெல்லாம் அம்மாகூட ஆஸ்பத்திரியிலதான் இருப்பேன். அப்போதான் மருத்துவம் சார்ந்து ஏதாவது படிக்கணும்னு முடிவு பண்ணினேன்.

அப்பா, அம்மா இறந்த பிறகு, ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஒருவேளைச் சாப்பாடுகூட இல்லாத கஷ்டம். அப்போதான் எனக்குள்ள இருந்த பெண் தன்மையை உணர ஆரம்பிச்சேன்.

தினமும் நான் கண்ணுக்கு மை வெச்சுட்டு வர்றேனா, லிப்ஸ்டிக் போட்டுட்டு வர்றேனானு பார்த்து என்ன அடிக்கிறதுதான் எங்க வாத்தியாருக்கு வேலை. இதைப் பார்த்து பசங்களும் கேலி, கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஒருவழியாகக் கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சேன். ‘அடுத்து என்ன படிக்கலாம், எந்த காலேஜ் சேர்ந்தா நல்லாயிருக்கும்’னு எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. என் அக்காவுக்கும் அண்ணனுக்கும் அந்த அளவுக்கு விவரம் தெரியாது.

நானே முடிவு பண்ணிதான் சேலம் ஏ.வி.எஸ் காலேஜ்ல, பி.எஸ்சி மைக்ரோபயாலஜியில சேர்ந்தேன். முதல் ரெண்டு வருஷம் பசங்ககூட உட்கார்ந்திருந்தேன். ஆனாலும் என்னோட செயல்பாடுகளெல்லாம் பெண்கள் மாதிரியே இருக்கும். கல்லுரியில ஏதாவது கலைநிகழ்ச்சின்னா, என்னைத்தான் பெண் வேஷம் போடச் சொல்வாங்க.

பெண் வேஷம் போடும்போதெல்லாம் எனக்கு சந்தோஷமா இருக்கும். மேக் -அப் போடுறதுல அவ்ளோ இஷ்டம். நாளுக்கு நாள் இந்த விருப்பம் அதிகமாக, மூணாவது வருஷத்துல பொண்ணுங்க உடையில கல்லூரிக்குப் போக ஆரம்பிச்சேன். என்னோட விருப்பத்தைக் கல்லூரியில சொன்னேன். அவங்களும் அனுமதி தந்தாங்க. பெண் உடை அணிஞ்சு, பெண்களோட உட்கார்ந்துதான் அந்த வருஷம் முழுக்கப் படிச்சேன். பசங்க ஜாலியா கேலி பண்ணுவாங்க. பொண்ணுங்க நல்லா சப்போர்ட் பண்ணுவாங்க. நான் அப்போ அறுவை சிகிச்சைகூட பண்ணிக்கலை.

அடுத்ததா, கோவையில இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில முதுகலை நுண்ணுரியியல் படிப்புல சேர்ந்தேன். நல்லாப் படிக்க ஆரம்பிச்சேன். என் சிந்தனைகள் முழுவதும் படிப்பு மேல மட்டும்தான் இருந்தது.

அதுவரை நல்லா போய்க்கிட்டு இருந்த வாழ்க்கை சிக்கலானது அதுக்கப்புறம்தான். 2010-ம் வருஷம் எம்.எஸ்சி முடிச்ச எனக்கு, 2014-ம் வருஷம் வரைக்கும் வேலையே கிடைக்கலை. சிலபேர் அலுவலகத்துக்குள்ளேயே என்னை அனுமதிக்கலை. வாசல்லயே திருப்பி அனுப்பிடுவாங்க. வீட்டைவிட்டும் வெளியே வந்துட்டேன்… வேலையும் கிடைக்கல… தனிமரமாகிட்டேன்.

அப்பதான் அர்ச்சனா, ஷில்பியோட நட்பு கிடைச்சது. நான் திருநங்கைகளோட தங்க ஆரம்பிச்சது அதுக்கப்புறம்தான். கொஞ்ச நாள்லயே அறுவைசிகிச்சையும் செஞ்சுக்கிட்டேன். ‘எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பிச்சையெடுக்க மாட்டேன், பாலியல் தொழில் செய்யமாட்டேன்’னு சொல்லிதான் அவங்ககூட சேர்ந்தேன். அவங்களும் என்னை வற்புறுத்தலை. என்னை நல்லாப் பார்த்துக்கிட்டாங்க. நான் சமையல், வீட்டு வேலைகளைப் பார்த்துப்பேன்.

யாரும் வேலை கொடுக்காததால அரசாங்கத்துக்கிட்ட உதவி கேட்டேன். 2014-ம் வருஷம் தற்காலிகமா வார்டு மேனேஜர் வேலை போட்டுக் கொடுத்தாங்க. ரொம்பக் கம்மியான சம்பளம்தான். வாங்கின சம்பளம் ரூமுக்கும் சாப்பாட்டுக்குமே சரியா இருக்கும்.

`தற்காலிக வேலையை நிரந்தர வேலையாக்கணும்’னு சுகாதாரத்துறை அமைச்சர்கிட்ட தொடர்ச்சியா கோரிக்கைவெச்சேன். நடைமுறையில கொஞ்சம் சிக்கல் இருந்ததால என்னோட கோரிக்கையை உடனடியே அரசாங்கத்தால நிறைவேற்ற முடியல. ஒருவழியா எல்லாச் சிக்கலும் தீர்ந்து லேப் டெக்னீஷியன் போஸ்ட்ல நிரந்தரமான ஒரு வேலை கிடைச்சிடுச்சு. ஆண்டவனுக்கு ரொம்ப நன்றி.’’

வேலைகள்: “ஒருத்தரோட ரத்தத்தை அப்படியே மத்தவங்களுக்கு ஏத்த முடியாது. ஏத்துறதுக்கு நடுவுல சில நடைமுறைகள் இருக்கு. முதல்ல ஸ்கிரீனிங். ரத்தத்துல ஹெச்.ஐ.வி, ஹெச்.சி.டி போன்ற பாதிப்புகள் இருக்கான்னு பார்த்து நல்ல ரத்தத்தைப் பிரிச்சு எடுக்கணும். அடுத்ததா ரத்தத்தை பிளாஸ்மா, பிளேட்லெஸ்னு பிரிச்சு எடுக்கணும். இதுல எது தேவையோ அதை பாதிக்கப்பட்டவரின் உடல் ஏத்துக்குமான்னு கிராஸ் செக் செய்யணும். இவைதான் என்னோட வேலைகள். பாதிக்கப்பட்ட ஒருத்தருக்கு ரத்தம் ஏத்தலாமா கூடாதான்னும் நான் பரிசோதிச்சுச் சொல்லணும்.’’

“உடலுக்குத் தீங்கு விளைவிக்கிற பாக்டீரியாக்களைத் தடுத்து நிறுத்துற ஆற்றல் எந்த மருந்துக்கு இருக்குனு கண்டறியறதுதான் என்னோட ஆராய்ச்சி. பாக்டீரியாக்கள் தொண்டைப் பகுதிக்குள் இறங்கும்போதே தடுப்பதற்கான ஆராய்ச்சி. இதை ‘Antibacterial in upper respiratory tract infection’-னு சொல்வாங்க.’’

“திருநங்கைகளையும் சக மனுஷியா நினைங்க. நிறையப் பேர் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. நல்லா பேசுறாங்க. பழகுறாங்க. சிலர் இன்னமும் திருநங்கைகளை ஒரு மாதிரியாத்தான் பார்க்குறாங்க. இந்த நிலைமை மாறணும். என்னை மாதிரியான திருநங்கைகள் வேற வழியில்லாமதான் பிச்சை எடுக்குறாங்க, பாலியல் தொழில்ல ஈடுபடுறாங்க. அதனால அவங்க கௌரவமா வாழ்றதுக்கான வசதிகளை அரசாங்கம் செஞ்சு கொடுக்கணும்.

அதுமட்டுமில்லை, ஒவ்வொரு திருநங்கையும் எவ்வளவுதான் சோதனைகள், கஷ்டங்கள் வந்தாலும் நல்ல வழியில முன்னேறணும்னு நினைக்கணும்.

திருநங்கைகளுக்குள்ள ஒரு குடும்ப உறவுமுறை இருக்கும். அம்மா, அக்கா, தங்கை… அப்படி என்னை மகளா தத்தெடுத்துக்கிட்டவங்க, பாரதி பாஸ்டர். எனக்கு மட்டும் இல்லை. பிரித்திகா, கிரேஸ் பானு, ஷானவி எங்க நாலு பேருக்குமே அவங்கதான் அம்மா. நாங்க நாலு பேருமே அடுத்தகட்டத்துக்கு வந்திருக்கோம்னா அவங்கதான் காரணம். திருநங்கைகளுக்கு ஒரு திசைகாட்டிபோல அவங்க இருக்காங்க. அவங்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றி.

கடைசியா என்னோட முக்கியமான கோரிக்கை, நான் பெண்ணாக மாறணும், அப்படியே வாழணும்னுதான் ஆசைப்படுறேன். அதனால தயவு செஞ்சு யாரும் என்னை திருநங்கையாப் பார்க்காதீங்க. ஒரு பெண்ணாகப் பாருங்க ப்ளீஸ்”.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>