தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படும். தகுதி தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள்/ தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. இதேபோல், குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது, முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும்.
முதன்மை எழுத்துத் தேர்வானது மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும். இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இந்த தகுதித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வின் இதர போட்டித் தேர்வுத்தாள்/ தாட்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அறிவித்தது. இந்த நிலையில் தமிழக அரசாணை அடிப்படையிலான மாற்றப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை டிஎன்பிஎஸ்சி நேற்று தனது இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.