10 மணி நேரத்தில் 173 கவிதைகள் எழுதி சாதனை; 9 நூல்கள்! 35விருதுகள்! வயதோ 13! அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்: கலெக்டர் பாராட்டு

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார். அங்குள்ள தனியார் பால் பண்ணையில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு மதுரம் ராஜ்குமார் (13), ஜெசிகா (11) என்று 2 குழந்தைகள் உள்ளனர். இதில் மதுரம் ராஜ்குமார், மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதலே தமிழ் மொழியின் மீதும், பாரதியார் மற்றும் கலைஞர் கருணாநிதியின் கவிதைகள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இலக்கியத்தில் தனிப்பெரும் சாதனைகளை புரிந்து வருகிறார்.

பள்ளியளவில் நடந்த கவிதை போட்டிகளில் தொடங்கிய இவரது பயணம், தற்போது மிகச்சிறந்த ஒரு கவிதை நூலாசிரியராக உயர்த்தியுள்ளது. பாரதியார் மற்றும் ஒளவையாரின் ஆத்திச்சூடி கவிதைகள், திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கும் தனி கவிதை ெதாகுப்பு, ஆகாய நெரிசலில் பட்டம் என்ற சிறார் பாடல்கள், இரவோடு நிற்காத வானம், காலத்தை வென்ற காலம் உள்ளிட்ட தலைப்புகளில் 9 புத்தகங்களை வெளியிட்டுள்ளார் மதுரம் ராஜ்குமார். இவர், 10 மணிநேரத்தில் தொடர்ந்து 173 தலைப்புகளில் கவிதை எழுதி படைத்த உலக சாதனை, மற்றுமொரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

இப்படி தொடர் சாதனை நிகழ்த்தி வரும் மாணவனுக்கு, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கி பல்வேறு அமைப்புகள் சார்பில் 35 விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இளங்கம்பன் விருது, கலாம் கனவு நாயகன் விருது, பிறை நிலா விருது, காந்தி விருது, தமிழன் விருது, கலாம் விருது, இளம் சாதனையாளர் விருது, இளம் கவிச்சுடர் விருது, இளம் பாரதி விருது, இளம்கவி விருது, கனவு மாணவன் விருது என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

சாதனை படைத்து வரும் மாணவர் மதுரம் ராஜ்குமார், நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது பெற்றோருடன் வந்தார். அவருக்கு கலெக்டர் கார்மேகம் பொன்னாடை அணிவித்து பாராட்டியதுடன், வாழ்வில் மேலும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டும் என வாழ்த்தினார்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>