ராஜீவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு- சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!

ராஜீவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு- சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர விடுதலைப்புலி ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் கொடியிலும் புலிகளின் படம் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஈடுபட்டுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கந்தசாமி என்பவர் விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விக்கிரவாண்டி அருகே உள்ள கஞ்சனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்பது போன்று அவரது பேச்சு அமைந்து இருந்தது.

சீமான் அப்பொழுது, “அமைதிப்படை எனும் அநியாய படையை அனுப்பி, என் இனத்தை கொன்று குவித்த ராஜீவ்காந்தி எனும் என் இனத்தின் எதிரியை தமிழன் தாய் நிலத்திலேயே கொன்று புதைத்தோம் என்று வரலாறு பேசும். ராஜீவ்காந்தியை கொன்றது சரிதான் என்று கூறும் காலம் வரும். வரலாறு திருத்தி எழுதப்படும்” என்று கூறியிருந்தார்.

சீமானின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். சீமானை கண்டித்து போராட்டங்களும் நடைபெற்றன. சென்னையிலும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். டி.ஜி.பி.யிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, விஷ்ணுபிரசாத் எம்.பி., விழுப்புரம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் ஆகியோர் நேற்று விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து பேசினர். அப்போது சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், “சீமான் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்று புதைத்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் சீமான் மீது இந்திய தண்டனை சட்டம் 153 (தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல்), இந்திய தண்டனை சட்டம் 504 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்) ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>