செங்கல்பட்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், செங்கல்பட்டு நீதிமன்ற சார்பு நீதிபதியுமான எஸ்.மீனாட்சி விடுத்துள்ள அறிக்கை. நாடு முழுவதும் வரும் 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெ உள்ளது. அதில் அனைத்து சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து அல்லாத குடும்ப வழக்குகள், நில எடுப்பு இழப்பீடு, வங்கி கடன் வழக்குகள், செக் மோசடி வழக்குகள், குற்றவியல் வழக்குகள் உள்பட அனைத்து வழக்குகளும் எடுத்து கொள்ளப்படும். மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக பேசி முடிக்கப்படும் வழக்குகள் மீது மேல்முறையீடு கிடையாது. மேலும் நீதிமன்ற கட்டணமும் திரும்ப வழங்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடத்தில் கடந்த 27ம் தேதி முதல், இம்மாதம் 9ம் தேதி வரை தினமும் மதியம் 2:30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை வழக்குகளை சமரசம் பேசி முடிக்க அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்குகளை விரைவாக மற்றும் சுமுகமாக முடித்து கொள்ள விரும்புவோர், அவரவர் வழக்குகள் நடைபெறும் நீதிமன்றத்தையோ அல்லது செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தையோ உடனடியாக அணுகலாம் என கூறப்பபட்டுள்ளது.
நன்றி :தினகரன்