மேகதாது விவகாரம்: ஒருமித்த குரலில் எதிர்த்த கட்சிகள்!

 
மேகதாது விவகாரம், ஒருமித்த குரல் எதிர்த்த கட்சிகள்!
facebook sharing button
 

‘கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது’ என, அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். இது தொடர்பான விவாதம்:

காங்., – செல்வப்பெருந்தகை:

அனைத்துக் கட்சி குழுவினர், நீர்வளத் துறை அமைச்சர் தலைமையில் டில்லி சென்று, மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினோம். ஆனால், பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி, தமிழக மக்களை, விவசாயிகளை பாதிப்படைய வைத்துள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி – வேல்முருகன்:

மத்திய அமைச்சரிடம் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், மத்திய அரசு பாராமுகத்துடன் நம்மை அணுகுகிறது. அமைச்சர் சரியான தீர்வு காண வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூ., – நாகை மாலி:

‘மேகதாதுவில் அணை கட்டும் பணியை யார் தடுத்தாலும் கட்டி முடிப்போம்’ என, கர்நாடக முதல்வர் கூறுவது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. நாம் ஒன்று கூடி, கர்நாடக அரசின் முயற்சியை தடுத்தாக வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி – ஜவாஹிருல்லா:

மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்தபோது, நடுநிலையாக நடப்பதாக கூறினார். ஆனால் வரும் தகவல், மத்திய அரசு நடுநிலை தவறுகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்திய கம்யூ., – ராமச்சந்திரன்:

கர்நாடகா அணை கட்டினால், டெல்டா பகுதி பாலைவனமாகி விடும். எனவே, சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுத்து, அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – ஈஸ்வரன்:

இப்பிரச்னையில் சற்று தீவிரம் காட்ட வேண்டும். மத்திய அரசு உள்நோக்கத்தோடு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ம.தி.மு.க., – சதன் திருமலைகுமார்:

அணை கட்டினால் நீர்வளம் பாதிக்கும். எனவே அதை தடுக்க, அரசு எல்லா முயற்சிகளும் செய்ய வேண்டும்.

பா.ம.க., – ஜி.கே.மணி:

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறி, கர்நாடக அரசு செயல்படும் நிலை உருவாகி உள்ளது. அணை கட்டுவதை தடுக்க, அனைவரும் ஒருங்கிணைந்து உள்ளோம். தேவைப்பட்டால் தமிழகம், ஒரே குரலில் எழுந்து நிற்கிறது என்கிற அடையாள போராட்டத்தை அறிவித்தால் தவறில்லை. தமிழக மக்கள் ஒன்று திரண்டு நிற்பதை, கர்நாடக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

பா.ஜ., – எம்.ஆர்.காந்தி:

கர்நாடக அரசின், மேகதாது அணை கட்டும் திட்டத்தை, தமிழக பா.ஜ., எதிர்க்கும். தமிழக அரசுக்கு துணை நிற்கும். மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என, பா.ஜ., வலியுறுத்துகிறது.

வி.சி., கட்சி – சிந்தனைச் செல்வன்:

அரசியல் ஆதாயத்திற்காக, மக்களின் கவனத்தை திசை திருப்ப, கர்நாடக அரசியல்வாதிகள் எதிர்மறையான சிந்தனையை கையாளுகின்றனர். இதை முறியடிக்க, முதல்வர் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம்:

சட்டப்பூர்வமாக அங்கீகாரம் கிடைத்த பின்னும், கர்நாடக அமைச்சர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறுபட்டு, கருத்துகளை தெரிவிக்கின்றனர். இதை, அனைத்துக் கட்சியினரும், மக்களும் கடுமையாக எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம். மீண்டும் முதல்வர், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை கலந்து பேசி, சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன்:

கட்சி வித்தியாசமின்றி அனைவரும் ஒரு நிலையில் இறுதி வரை நின்றால், நிச்சயம் இப் பிரச்னையில் வெற்றி பெறுவோம். கர்நாடகாவில் ஆட்சி மாறினாலும், முதல்வர், நீர்ப்பாசன துறை அமைச்சர் மாறினாலும், கட்சி வித்தியாசமின்றி ஒரே மாதிரியாக பேசுவர். அதேபோல், கேரளாவில் வித்தியாசம் இருக்காது. தமிழகத்தில் சில காலம் வித்தியாசம் ஏற்பட்டது.

தற்போது, அவை எல்லாம் மறந்து விட்டன. அரசியல் கருத்தில் மாறுபட்டிருக்கலாம். இரு மொழிக் கொள்கை, ஹிந்தி எதிர்ப்பு, காவிரி பிரச்னை போன்றவற்றில், நாம் ஒன்றுபட்டு நின்றால், எந்த சக்தியும் தமிழகத்தை வீழ்த்த முடியாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்துக்கு இணையானது. தற்போதுள்ள பிரச்னை, மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும்.

அடுத்த வாரம், காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில், இப்பிரச்னை விவாதிக்கப்படும் என, கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து ஆணைய கூட்டத்தில் பேச, எந்த முகாந்திரமும் இல்லை. நாம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், காவிரி நதி நீர் ஆணையம், மேகதாது அணை குறித்து பேசக்கூடாது. இது தான் தமிழகத்தின் கொள்கை.

கர்நாடக முதல்வர் பொம்மை, நீதி தவற மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை, அரசியல் சூழ்நிலை காரணமாக அவர் பேசி இருக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை, மறுக்க வேண்டியதை மறுப்போம்; வாதாட வேண்டியதை வாதாடுவோம்; வெற்றி பெறுவோம்.

நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>