தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது; கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா!

தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது; கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா!

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது.

கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கிய 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் அக்டோபர் 13-ம் தேதி நிறைவுபெற்றது. மேலும், கீழடி, கொந்தகை, பள்ளிச்சந்தை, மணலூர் என்று கீழடியில் சுற்றியுள்ள பகுதிகளில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி, வரும் ஜனவரி தொடங்கப்பட இருப்பதாகத் தகவல் தெரிவிக்கிறது.

தற்போது கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணி நடைபெற்ற பகுதியில் கிடைக்கபெற்ற பொருள்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலமாக ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கீழடியின் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற 52 குழிகளை மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நேரில் பார்வையிட்டார். மேலும், தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணா, “தமிழகத் தொல்லியல்துறை மேற்கொண்ட நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஆகழாய்வை மிகச்சரியாகச் செய்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

தற்போதைய ஆய்வு தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முந்தியது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் விரைவாகப் பணிகள் நடத்த முடியும்” என்றார்.

இந்தநிலையில், கீழடியில் நடைபெற்ற 5ம் கட்ட அகழாய்வை ஆவணப்படுத்தும் பணிகளை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டார். அவர், தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கீழடியில் கிடைக்கப்பெற்ற ஓடுகள், பவளம், பண்டையகால தமிழி எழுத்து உருவங்கள் அடங்கிய பானைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>