தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டம், திரு புவனத்தில் வைகை ஆற்றின் தென் கரையில் கீழடி கிராமம் அமைந் துள்ளது. இங்குள்ள பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பில் அமைந் துள்ள தொல்லியல் மேட்டில், இந்திய தொல்லியல் துறை கடந்த 2014 முதல் 2017 வரை அகழாய்வு மேற்கொண்டது. இதில், 7 ஆயிரத்து 818 தொல்பொருட்கள் அகழாய்வில் கிடைத்தன. கீழடியில் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன.
இச்சான்றுகள் அடிப்படையில் தமிழக அரசு தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவின் அனுமதியைப் பெற்றது. 4-ம் கட்ட அகழாய்வுக்கு தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கியது. கடந்த 2018 – 2019 ஆகிய ஆண்டில் நான்காம் கட்ட தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் 5,820 தொல்பொருட்களும், பழந்தமிழர் கட்டுமானப் பகுதியும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் தங்கத்தினாலான அணிகலன்களின் உடைந்த பாகங்கள், செம்பினாலான பொருட்கள், பல்வேறு வகையான மணிகள், சுடுமண்ணாலான உருவங்கள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. மேலும், தமிழ் எழுத்துப் பொறிப்பு கொண்ட 56 பானை ஓடுகள், 1001 குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இரண்டு உறை கிணறுகளும் வெளிப்படுத்தப்பட்டன.
2018-2019-ம் ஆண்டு ஐந்தாம் கட்ட அகழ்வாய்வை கீழடியில் மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவின் அனுமதி பெறப்பட்டது. தமிழக அரசு இதற்காக ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில், பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன.
இந்திய தொல்லியல் துறை இரண்டாம் கட்ட ஆய்வில் கட்டுமானத்தின் தொடர்ச்சி வெளிக்கொணரப்பட்டுள்ளது. சங்கு வளையல்கள், தந்தத்தாலான பொருட்கள் உட்பட 900 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழு வழங்கிய அனுமதி முடிந்த நிலையில், தற்போது அகழாய்வுப் பணி நிறைவடைந்துள்ளது. தற்போது நிழற்படம், அகழாய்வுக் குழிகளின் வரைபடம் தயாரித்தல் போன்ற ஆவணப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கீழடி அகழாய்வைக் காண அக்.13-ம் தேதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஓரிரு நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடைந்ததும், பொதுமக்கள் பார்வையிட வசதியாக, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் அனைத்தும் மதுரையில் கண்காட்சியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது