கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணிகள் புத்தாண்டின் (2019) தொடக்கத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் சங்க காலத் தமிழர்களின் நகர, நாகரிகம் குறித்து மத்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் 3 ஆண்டு அகழ்வாராய்ச்சி நடந்தன. நான்காம் ஆண்டு அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய தொல்லியல்துறை பெங்களூரு அகழாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்காமல், தமிழக தொல்லியல்துறைக்கு அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து, தமிழக தொல்லியல்துறை சார்பில் 4-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி கடந்த ஏப்ரல் 18-ல் துவங்கி செப்.30-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் 5 தொல்லியலாளர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர். இதில் 34 குழிகள் தோண்டயதில் 6 தங்க ஆபரணம் உட்பட 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது வரை அதை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த அக்.13-ம் தேதி அமைச்சர் பாண்டியராஜன், தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் கீழடியில் ஆய்வு செய்தனர். அப்போது, “ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு மத்திய தொல்லியல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம்” என்றனர்.
தற்போது தமிழக தொல்லியல்துறை 5-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய தொல்லியல்துறையின் மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்வாரத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் துவங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக தொல்லியல்துறை அதிகாரிகளிடம் பேசும் போது, “கீழடியில் 5-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய தொல்லியல்துறையிடம் விண்ணப்பித்திருந்தோம். 5-ம் ஆண்டு அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அகழ்வாராய்ச்சி துவங்கும். கடந்த ஆண்டு தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது ரூ.75 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.