ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணலில் அகழாய்வை தொடரக்கோரிய வழக்கில் தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எஸ்.காமராஜ் என்ற முத்தாலங்குறிச்சி காமராஜ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகங்கை மாவட்டம் கீழடி, ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதிகளில் தொடர்ந்து அகழாய்வு நடத்தவும், இப்பகுதிகளில் அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதிக்க வேண்டும்.
இதே போல் தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளை மற்றும் கீழடி அருகேயுள்ள கொந்தகை பகுதிகளில் புதிதாக ஆகழாய்வு மற்றும் அறிவியல்பூர்வ ஆராய்ச்சி மேற்கொள்ளவும் தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய தொல்லியல் துறைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (அக்.10) விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- தமிழ் இந்து