மாற்றுத்திறனாளிக்கு, மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில், மூன்று தங்க பதக்கங்கள் வென்ற அரசு பள்ளி மாணவன், பாரா ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என, உறுதியோடு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
கும்மிடிப்பூண்டி அருகே, தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான பன்னீர், ரூபாவதி தம்பதியின் மகன் கரண், 17. வலது கையில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். அந்த பள்ளியில், பிளஸ் 1, சேர்ந்தபோது, ஓட்ட பந்தயத்தில் அவரிடம் இருந்த திறமை கண்ட பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சுபா, தன் சொந்த முயற்சியில், சென்னையில் சிறப்பு பயிற்சிகளை வழங்கினார்.
சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட, கரண், ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவு தடகள போட்டிகளில் பங்கேற்றார். அந்த போட்டிகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்தார். அதன் மூலம் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.
சாதனை மாணவன் கரண் கூறுகையில், ‘உடற்கல்வி ஆசிரியையின் அறிவுறுத்தலின்படி, என்னை முழுமையான அர்ப்பணித்து பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
”தேசிய அளவிலான போட்டி மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியிலும் சாதிக்க வேண்டும் என்பது என் லட்சியம். அதை நோக்கி நான் ஓடி கொண்டிருக்கிறேன்” என, உறுதியுடன் தெரிவித்தார்.