தமிழக முன்னாள் முதலமைச்சர், நீதி கட்சியின் தலைவர்களில் ஒருவர், வகுப்புவாரி இடஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்தவர், ஐயா பனகல் அரசர் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார்.

பிறப்பும் படிப்பும்

ராமராயநிங்கார் வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் 1866 ஆம் ஆண்டு பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார். 1899 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

ஆரம்ப காலம்

ராமராயநிங்கார் 1912 இல் இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் சமீன்தார்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்; 1915 வரை உறுப்பினராக நீடித்தார். 1914 ஆம் ஆண்டு நடேச முதலியார் தொடங்கிய சென்னை திராவிடர் சங்கத்தில் சேர்ந்தார். ஷாஹூ மகாராஜின் பிராமணரல்லாதோர் இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டார். 1917 இல் டாக்டர் டி. எம். நாயரும், தியாகராய செட்டியும் சேர்ந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியைத் தொடங்கிய போது அதில் சேர்ந்தார். 1919 இல் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் ராமராயநிங்கார் அங்கம் வகித்தார்.

அமைச்சராக

1920 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடை பெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த முதலாம் நீதிக்கட்சி அரசவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார்.

முதல்வராக

ஏப்ரல் 11, 1921 இல், சுப்பராயுலு ரெட்டியார் உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் ராமராயநிங்கார் முதல்வராகப் பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் கல்வி மற்றும் சுங்கத் துறை அமைச்சராக ஏ. பி. பாட்ரோ, வளர்ச்சித் துறை அமைச்சராக கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதே ஆண்டு அரசு பணிகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்தார். தலித்துகள் “பறையர்” என்று குறிக்கப் படாமல் “ஆதி திராவிடர்” என்று குறிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். ஆனால் அதே ஆண்டு பக்கிங்காம்-கர்நாடிக் ஆலையில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது தலித்துகளின் மீது அவரது அரசு கடுமையாக நடந்து கொண்டது. இதனால் தலித்துகளின் தலைவர் மயிலை சின்னத்தம்பி ராஜா நீதிக்கட்சியை விட்டு வெளியேறினார்.

தியாகராய நகர் பனகல் பூங்காவில் பனகல் அரசர் சிலை

1923 ஆம் நடை பெற்ற இரண்டாம் சட்ட மன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ராமராயநிங்கார் மீண்டும் முதல்வரானார். ஆனால் கட்சியில் நிலவிய அதிருப்தி, கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியது. சி. ஆர். ரெட்டி, நடேச முதலியார், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு, சுப்பராயன் என பல தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டதால், நீதிக்கட்சி குறைவான இடங்களையே பிடிக்க முடிந்தது. சட்டமன்றம் கூடிய முதல் நாளே சி. ஆர். ரெட்டி தலைமையில் எதிர்க் கட்சிகள் ராமராயநிங்கருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணை கொண்டு அவர் அத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். அதே ஆண்டு பிரித்தானிய அரசு அவருக்கு “பனகல் அரசர்” என்ற பட்டத்தை வழங்கிப் சிறப்பித்தது.

பனகல் அரசர் தன் இரண்டாம் அமைச்சரவையில் தமிழர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்றெழுந்த கோரிக்கையை ஏற்று சிவஞானம் பிள்ளையை வளர்ச்சித் துறை அமைச்சராக்கினார். தெலுங்கர்களுக்கென ஆந்திர பல்கலைக்கழகமும், தமிழர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகமும் இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டன. 1925 ஆம் ஆண்டு இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார். சென்னை நகரினை விரிவு படுத்துவதற்காக, நகரின் கிழக்கில் இருந்த பெரிய குளத்தை வறளச் செய்து நிலமாக்கினார். சென்னை நகரின் தி. நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அவ்வாறு நீர் பரப்பிலிருந்து மீட்சி செய்யப் பட்டவையே. இவரது ஆட்சி காலத்தில் தான் நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவி செய்யும் சட்டம் இயற்றப் பட்டது. 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் சட்டமன்றத் தேர்தலில் பனகல் அரசரின் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. வெற்றி பெற்ற சுயாட்சி கட்சி ஆட்சி அமைக்க மறுத்து விட்டதால், ஆளுனர் கோஷன் இரண்டாம் பெரிய கட்சியின் தலைவர் பனகல் அரசரை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் சிறுபான்மை அரசு அமைக்க விருப்பமில்லாததால் பனகல் அரசர் மறுத்து விட்டார்; சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளின் அரசு அமைந்தபோது, எதிர்க் கட்சித் தலைவரானார்.

இறப்பு

 
சைதாப்பேட்டையிலுள்ள பனகல் மாளிகை

பனகல் அரசர், டிசம்பர் 16, 1928 இல் இறந்தார். அவரது நினைவாக தி. நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்கா “பனகல் பூங்கா” என்றும் சைதாப்பேட்டையிலுள்ள மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம் “பனகல் மாளிகை” என்றும் அழைக்கப்படுகின்றன.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>