நாட்டில் இன்ஜினியரிங் கல்லுாரிகளும், இன்ஜினியரிங் பட்டதாரிகளும் பெருகிவிட்டதால், ஒரு காலத்தில் மரியாதைக்குரியதாக இருந்த பொறியியல் படிப்பு, தற்போது நகைச்சுவைக்குரியதாக மாறிவிட்டது.
அப்படி தான், பிளஸ் 2 முடித்துவிட்டு, பொறியியல் படிப்பை தேர்வு செய்த ஒரு ஏழை மாணவனும், சுற்றத்தினரால், ‘உனக்கு வேலை கிடைத்த மாதிரி தான்’ என, கேலி, கிண்டலுக்கு ஆளானான். அந்த கிண்டல், கேலியே, அந்த மாணவனை, ஒரு கண்டுபிடிப்பாளனாக சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிஉள்ளது. ‘கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பதை போல, நாட்டில் ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் உருவாகலாம்; அவர்களில் சிறந்தவர்களுக்கு எப்போதுமே, தனிச் சிறப்பு உண்டு என்பதை, இந்த மாணவன் நிரூபித்து உள்ளான்.
சென்னை, கொளத்துார், விநாயகபுரம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த, நந்தகோபால் – சர்மிளா தம்பதியின், இரண்டாவது மகன், ஹேமானந்த், 20. பெரம்பூர், அகரம் பகுதியில் உள்ள, துணிக் கடையில், நந்தகோபால் பணிபுரிகிறார். ஹேமானந்த், பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்தார். தற்போது, பொறியியல் மாணவரான இவர், ‘கிளவுட் ரோபோ’ ஒன்றை உருவாக்கி, அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளார்.
ரோபோ குறித்து ஹேமானந்த் கூறியதாவது: எனக்கு மருத்துவர் ஆக விருப்பம். ஆனால், பொறியியல் படிக்க தான், இடம் கிடைத்தது. பொறியியல் தேர்வு செய்தவுடன், அனைவரும், ‘உனக்கு வேலை கிடைத்த மாதிரி தான்’ என, கிண்டல் செய்தனர். இந்த கிண்டலும், கேலியும் தான் என்னை செதுக்கியது. நான் தேர்ந்தெடுத்த துறையில், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. நான் எடுத்த பிரிவான, எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் பிரிவுக்கும், ரோபோடிக்சுக்கும் சம்பந்தம் இருப்பதை அறிந்து, பொறியியல் முதலாம் ஆண்டில் ஆய்வு செய்தேன். ஆய்வில், ‘புளுடூத் ரோபோ’ ஒன்றை கண்டுபிடித்தேன். பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர், எல்வின் என்பவரிடம், ஒரு மாதம் ரோபோடிக் கற்றுக்கொள்ள சென்றேன். அவர் கொடுத்த ஆலோசனையின் படி, இரண்டாம் தலைமுறை கிளவுட் ரோபோவை கண்டுபிடித்தேன். நான் கண்டுபிடித்துள்ள இந்த ரோபோவை, மொபைல்போன் மூலம் இயக்கலாம். மற்றொரு மொபைல்போன் மூலம், ரோபோ செல்லும் இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை காணலாம். இந்த ரோபோ மூலம், வேதியியல் நிறுவனங்களில், வாயு வெளியாவதை கண்டறிதல், வெப்பம் அதிகரிப்பதை கண்டறிதல் போன்றவற்றை கையாள முடியும். மேலும், வேதியியல் நிறுவனத்தில், வெப்பம் அதிகரித்தால், நம் மொபைல் போனுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும் வசதியும் உள்ளது. இதனால், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தோல் புற்றுநோய், அலர்ஜி உண்டாவதை தடுக்கலாம். மேலும், வேறு பகுதியில் இருந்தவாறே, நிறுவனத்தில் நடக்கும் நிகழ்வுகளை, ரோபோவில் உள்ள கேமரா மூலம் பார்க்கலாம்.
இந்த ரோபோவை ஒரு முறை, சார்ஜ் செய்தால், ஒரு வாரம் வரை செயல்படும். ரோபோவை உருவாக்க, 20ஆயிரம் ரூபாய் செலவானது. அடுத்ததாக, மூன்றாம் தலைமுறைக்கான, பறக்கும் ரோபோ தயாரிக்க உள்ளேன். அந்த ரோபோவில், ‘டெட்டனேட்டர்’ தொழில்நுட்பம் மூலம், ராணுவத்திற்கு உதவும் விதமாக, எதிரி நாட்டில், வெடி குண்டுகளை கொண்டு சென்று, கண்காணித்து வெடிக்க செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்த முடிவு செய்து உள்ளேன். இந்த தொழில்நுட்பம் வந்தால், ராணுவத்தில் உயிரிழப்பு குறையும். இந்த தொழில்நுட்பம் தயார் செய்ய, 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். பணம் இல்லாததால், ரோபோ தயாரிப்பு திட்டத்தை கிடப்பில் வைத்து உள்ளேன். இனி வரும் காலங்களில், ரோபோவிற்கான தேவை அதிகம் உள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு, ரோபோடிக்ஸ் குறித்து பாடம் எடுக்க உள்ளேன். இந்திய – ஜெர்மன் ஒப்பந்தபடி, 15 மாணவர்களை ஜெர்மன் அழைத்து சென்று பயிற்சி அளிக்க வேண்டும். இதில், தமிழகத்தில் இருந்து நான் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். ஜெர்மன் செல்ல, பயிற்சி கட்டணம், விமான கட்டணம் என எல்லாம் சேர்ந்து, இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதற்கு பணம் இல்லாததால், செய்வதறியாது உள்ளேன். தமிழக அரசும், தொண்டு நிறுவனங்களும், எனக்கு நிதி உதவி அளித்தால், ரோபோ குறித்த ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்துக்கு செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.