புத்துயிர் பெறும் கிராமியக் கலைகள் -நம்பிக்கையுடன் வலம் வரும் நாட்டுப்புற கலைஞர்கள்

*அரசு விழாக்களில் வாய்ப்பு அறிவிப்பால் மகிழ்ச்சி

தமிழக அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்கப்படுவதால் கிராமியக் கலைகளுக்கு புத்துயிர் கிடைக்கும் என்று நாட்டுப்புற கலைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  பண்டைத் தமிழர்களின் கலாச்சாரம், வாழ்வியல், பண்பாட்டை உணர்த்துவதில் நாட்டுப்புற கலைகள் முக்கிய பங்கு வகித்தன. ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், காவடிஆட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தேவராட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், தப்பாட்டம், புலியாட்டம், குறவன் குறத்தியாட்டம் என்று இந்த பட்டியல் மிகவும் நீளமானது. இந்த கலைகள் பொழுது போக்க மட்டுமன்றி தமிழர்களின் பன்முகத்திறமைகளுக்கும் வழிவகுத்து கொடுத்தது. காலத்தின் சுழற்சியும், கணிப்பொறியின் ஆதிக்கமும், நம்மை நவீனங்களை நாடிச்செல்ல வைத்துள்ளது. இதனால் பண்பாடு காத்த பாரம்பரிய கலைகளின் சுவடுகள் மெல்ல, மெல்ல மறைந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போதைய அரசு, விழாக்களில் இந்த கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது கவனம் ஈர்த்துள்ளது. இவற்றை மட்டுமே நம்பிய நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவித்து, முடங்கி கிடந்த நூற்றுக்கணக்கான கலைஞர்கள், புதிய உற்சாகத்துடன் மக்கள் மத்தியில் வலம் வரத் தொடங்கியுள்ளனர்.இது குறித்து தமிழக பராம்பரிய கலைகள் மேம்பாட்டு சங்கங்களின் அமைப்பாளர்கள் கூறியதாவது:நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற நாட்டுப்புற கலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. வெள்ளை ஆடை அணிந்து, காலில் சலங்கை கட்டி, கையில் ஆளுக்கொரு கைக்குட்டையை பிடித்து லாவகமாக வீசியபடியே ஆடுவது ஒயிலாட்டம். இதிகாச, புராண வரலாற்று கதைகளை அடிப்படையாக கொண்டு ஒயிலாட்டம் நடக்கும். இரண்டு கோல்களை பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி, ஒலி எழுப்பிய படி ஆடுவது கோலாட்டம்.

இது இசையை அடிப்படையாக கொண்டது. மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட குடத்தை தலையில் வைத்துக் கொண்டு ஆடுவது கரகாட்டம். சுற்றி சுழன்று, வளைந்து, நெளிந்து ஆடினாலும் தலையில் இருக்கும் கரகம் என்னும் குடம் கீழே விழாமல் இருப்பது இந்த ஆட்டத்தின் சிறப்பு. தமிழ்கடவுள் முருகனை வேண்டி ஆடும் ஆட்டமே காவடியாட்டம். இது இறைவழிபாட்டுக்கான ஆட்டம் என்றாலும் கலைத்திறனும், ஆடல் நுட்பமும் மிகுதியாக இருக்கும்.

தெய்வங்களின் வரலாறு, தெய்வநிலை பெற்றவர்களின் வரலாறு, அரசர்களின் வரலாற்றை உரைநடையில் விளக்கி கூறுவது வில்லுப்பாட்டு. தோலாலும், மரத்தாலும் செய்த பொம்மைகளை ஒரு திரைக்குப்பின்னால் இருந்து ஆடியசைத்து கதை சொல்வது பாவைக்கூத்து. பின்னாளில் வந்த நாடகத்திற்கும், திரைப்படத்திற்கும் இதுவே வழிவகுத்தது என்றும் கூறலாம். இப்படி ஒவ்வொரு கலைக்கும் ஒரு சிறப்பு உள்ளது.

ஆனால் இயந்திர மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கைச் சூழலில், இந்தக் கலைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. அதிலும் இளைய தலைமுறையினருக்கு இந்தக்கலைகளின் பெயர்கள் கூட விசித்திரமாக தெரிகிறது. ஒருகாலத்தில் மக்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்திய இந்த கலையை நம்பி, தற்போதும் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். போதிய வாய்ப்புகள் இல்லாததால் அவர்கள் பல ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கின்றனர். அதிலும் கொரோனா பெருந்தொற்று பரவலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் சொற்ப வாய்ப்புகளுக்கும் உலை வைத்து விட்டது.

இந்த சூழலில் தற்போதைய தமிழக அரசு, இந்த கலைகளுக்கு உற்சாகமூட்டி கரம் கொடுத்து வருவது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அரசு விழாக்களின் போது இந்த கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது மிகவும் பாராட்டுக்குரியது. கல்வி நிறுவனங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும், நாட்டுப்புற கலை இடம் பெற வேண்டும் என்று அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது. இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் தமிழக முதல்வரின் சேலம் வருகையின் போது, ஆங்காங்கே மேடைகள் அமைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தியது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இதனால் மாண்டு கொண்டிருந்த நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் புத்துயிர் பெற்று, மீண்டு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இவ்வாறு அமைப்பாளர்கள் கூறினர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>