இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தபால் துறை தேர்வு: மத்திய அரசு சுற்றறிக்கை!

இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தபால் துறை தேர்வு: மத்திய அரசு சுற்றறிக்கை!

தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தபால் துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் அந்தந்த மாநில மொழிகள் மற்றும் இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் கேள்வி கேட்கப்படும். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு தபால் துறைகளுக்கான தேர்வு தமிழகத்தில் நடந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இத்தேர்வில் அரியானா, பீகார் உள்ளிட்ட வடமாநில மாணவர்கள் தமிழ் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 4 வருடங்களாக தபால் துறைகளுக்கான தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், காலிபணியிடங்களை நிரப்பக்கோரி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டது. தற்போது, ஏற்கனவே அமலில் உள்ள தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, இனி தபால் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும் என்றும், அந்தந்த மாநில மொழிகள் அதில் இடம்பெறாது எனவும், இரண்டாம் தாள் தேர்வு ஆங்கிலத்தில் இருந்து அந்தந்த மாநில மொழிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது, இரண்டாம் தாளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதன் மூலம் முதல் தாளை தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தேர்வர்கள் அந்தந்த மாநில மொழிகளில் எழுத முடியாது. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும்.

இதுவரை அந்தந்த மாநில மொழிகளிலேயே தேர்வுகள் எழுதப்பட்டு வந்தது. மத்திய அரசு இதை மாற்றி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மாநில மொழிகளில் தேர்வு எழுதுவோர் மிகவும் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையில் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இது மாற்றப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>