ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்!: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

 
 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வெளிநாட்டு, கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். குறிப்பாக நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும் என்பதால் அதனை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும் எனவும் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்கு திமில் இருப்பதில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு விசாரித்தது. அச்சமயம் வெளியான தீர்ப்பில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் 2017ல் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில் நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையிலும், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியதை சுட்டிக்காட்டியுள்ளனர். இதை தொடர்ந்து, வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்துக்கொள்ள தடையில்லை என்று அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு, கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்ககூடாது என்று உத்தரவிட்டனர்.

மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர் சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும், பழைய சான்றிதழ் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாடுகள் செயற்கைமுறை கருத்தரித்தலை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: