ஆஸ்திரேலியாவை அடுத்த சமோவ் தீவில், கடந்த 9-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை காமன்வெல்த்-2019 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியாவின் சார்பில் மகளிர் பளுதூக்கும் பிரிவில், புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவரும், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவருமான அனுராதா என்பவர், 87 கிலோ உடல் எடைப் பிரிவில் கலந்துகொண்டு, ஸ்னாட்ச் முறையில் 100 கிலோவும், கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 121 கிலோவும் என மொத்தம் 221 கிலோ எடையைத் தூக்கி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
பத்திரிகையாளர்களைச் சந்தித்த அனுராதா, “காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்காக, எனக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பளுதூக்கும் போட்டியில், சீனியர் பிரிவில் தமிழகத்திற்குக் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் நான் வாங்கியதுதான் என்பதில் பெருமைகொள்கிறேன். விளையாட்டுப் போட்டியில் பலர் பயிற்சிபெற்றிருந்தாலும் அவர்கள் பதக்கம் வெல்ல சரியான வழிகாட்டுதல் இல்லை.
தென்மாவட்டங்களில் பளுதூக்குதல் பயிற்சிபெற வசதி ஏற்படுத்திக்கொடுத்தால், பலரும் பதக்கம் பெறலாம். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தந்தை சிறுவயதில் இறந்துவிட்ட நிலையில் தனது சகோதரர் ஊக்கத்தினாலேயே இந்நிலையை எட்டியுள்ளேன். பெண்கள் போட்டியில் பங்கேற்க எதிர்ப்பு வந்தபோதும், என்மீது எனது சகோதரர் வைத்த நம்பிக்கையும், அவர் அளித்த தொடர் உத்வேகமும் என் வெற்றிக்கு வழி வகுத்தது. புதுக்கோட்டையில் பயிற்சிபெற போதிய வசதி இல்லாததால், கடந்த 2014-ல் பட்டியாலா சென்று அங்கு பயிற்சி மற்றும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.
2015-ம் ஆண்டு, தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 3 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை பெற்றேன். அதன்பிறகு, காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்தது. அடுத்து ஃபெடரேஷன் மற்றும் காவல்துறை மூலம் பல்வேறு உதவிகள், ஊக்கமும் கிடைத்தன. பெண்கள் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கக்கூடாது என்ற எண்ணம் பொதுவாகப் பலருக்கும் உள்ளது. அதைத் தவிர்த்து, நம்மால் முடியும் என்ற முனைப்பில் அனைவரும் முயன்று, என்னைப்போல பதக்கங்களைப் பெற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். தொடர்ந்து 2024 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று, அதன்மூலம் ஒலிம்பிக்போட்டியில் தகுதிபெற்று இந்தியாவிற்குப் பதக்கம்வெல்வதுதான் எனது லட்சியம்”என்றார்.