கேரள மாநிலத்தில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து கிடைப்பதால் பல இடங்களுக்கு லாரிகள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இடுக்கி மாவட்டம் நல்லதண்ணி குருமலைப் பகுதியில் அதிகளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா நகரமான மூணார் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். மலைப் பாதைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை. மின்சாரமும் இல்லாததால் தோட்டத் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் இருந்து லாரிகளில் வரும் உணவுப் பொருள்களை அரசியல்வாதிகள் கைப்பற்றி தங்களுக்கு வேண்டப்பட்ட மக்களுக்கு அளிப்பதாக இங்கு வசிக்கும் தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நல்லதண்ணி குருமலையில் வசிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத நிலையில், இளைஞர்கள் சிலர் சேர்ந்து 60 அரிசி மூட்டைகளை பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து அந்தப் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்தப் பகுதி மக்களுக்கு கிடைத்த நிவாரணப் பொருள் அரிசி மூட்டைகள் மட்டும்தான். இந்தப் பகுதி கவுன்சிலர் கோமதி கூறுகையில், “ தமிழகத்தில் இருந்து ஏராளமான லாரிகள் நிவாரணப் பொருள்களுடன் வருகின்றன. அவற்றை மலையாள அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தி தங்கள் பகுதிக்கு கொண்டு சென்று தங்களுக்குத் தேவையானவர்களுக்கு மட்டுமே வழங்குகின்றனர். இதனால், உண்மையாக உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் சென்று சேர்வதில்லை. எனவே, தமிழத்திலிருந்து நிவாரணப் பொருள்களைக் கொண்டு வருபவர்கள் சரியானவர்களை அடையாளம் கண்டு அவர்களிடத்தில் பொருள்களை ஒப்படைக்கவும் ” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.