தமிழ்ப் பாடல் பாடியதனால் தாக்குதல் – பெங்களூரு சம்பவத்தால் கொதிக்கும் இசைக்கலைஞர்கள்!

தமிழ்ப் பாடல் பாடியதனால் தாக்குதல் – பெங்களூரு சம்பவத்தால் கொதிக்கும் இசைக்கலைஞர்கள்!

பெங்களூரு மார்க்கண்டேயன் நகர் பகுதியில் இருக்கிறது கங்கை அம்மன் கோயில். ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கோயில் நிர்வாகத்தினர் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்க்கெஸ்ட்ராவில், அனைத்து மொழிப் பாடல்களையும் பாடியுள்ளனர். அப்போதெல்லாம் எந்த சலசலப்பும் இல்லை. ஆனால், தமிழ்ப் பாடல் ஒன்றை பாடகர்கள் பாட ஆரம்பிக்க, திடீரென்று திபுதிபுவென மேடைக்கு ஏறும் ஒரு கூட்டம், மைக்கைப் பிடுங்கி வீசி, இசைக்கருவிகளை உடைத்து, பாடிக்கொண்டிருந்தவர்களை கடுமையாகத் தாக்க ஆரம்பிக்க, மேடையில் இருந்தவர்கள் நிலைகுலைந்து போயினர்.

காவலர்கள் முன்னிலையிலேயே இந்த அடாவடி அரங்கேறியுள்ளது. பெங்களூரில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ கடந்த சில நாள்களாக சமூக வளைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. கன்னட ரட்சக வேதிக அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்ப் பாடலை பாடியதற்காகத்தான் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்ற தகவல் மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

இந்தத் தாக்குதல் இசைக்கலைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களிலும் இசைக்கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், ஈரோட்டில் ஒன்று திரண்ட இசைக்கலைஞர்கள் இந்த நிகழ்வைக் கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>