மாதம் தோறும் பிரதமர் மோடி மக்களிடம் வானொலியில் பேசும் ‘மான்கிபாத்’ நிகழ்ச்சி, ஜூன் 25ல் நடந்தது. அதில் மத்திய அரசின் திட்டத்தால் பயனடைந்த விதம் பற்றி, பிரதமருக்கு மதுரை பெண் அருள்மொழி எழுதிய கடிதத்தை பிரதமர் பாராட்டி பெருமிதப்படுத்தினார்.
பல செய்திகளை பேசிய பிரதமர், 10 நிமிடங்கள் அருள்மொழியை பாராட்டிய விதம், பெண்களுக்கு பெரும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இ-ஜெம் (இ- மார்க்கெட்டிங்) திட்டத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாக அதை சிலாகித்து பிரதமர் பேசினார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
அருள்மொழி இ- மார்க்கெட்டிங் மூலம், பொருட்களை அரசு அலுவலகங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். பிரதமர் அலுவலகத்திலிருந்து, 2 தெர்மோ பிளாஸ்க் ஆர்டர் கிடைத்தது. அதனுடன் அவர், எப்படி இந்த வியாபாரத்தில் ஈடுபடுகிறேன். அது எதனால் சாத்தியமானது என விரிவாக ஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதியிருந்தார்.
கடிதத்தை படித்த பிரதமர், ஒரு சிறு கிராமத்தில் பிறந்த ஒரு பெண் எவ்வளவு எளிதாக பிரதமர் அலுவலகத்திலே வியாபாரம் செய்ய முடிகிறது என்றால் அது இந்த அரசின் ஒளிவுமறைவற்ற தன்மை, அதிகாரமளிப்பு, தொழில் முனைவு என்பது போன்ற அரசின் செயல்பாட்டால் தான் சாத்தியமாகியுள்ளது, என வியந்தார்.
மதுரை டி.ஆர்.ஓ., காலனியில் வசிக்கும் அருள்மொழி (28) ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்துள்ளார். மகன் ஹர்ஷா, 5 ம் வகுப்பு, மகள் ஜெனனி, யு.கே.ஜி., படிக்கிறாள். சொந்த ஊர் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார். கணவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
குழந்தைகளை கவனிப்பதற்காக வேலைக்கு செல்லாத அருள்மொழி, கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்த அறிவால், ஆன்லைனில் உள்ள வியாபாரங்களை கவனித்து வந்தார். அதில் இ- மார்க்கெட்டிங் மூலம், அரசு அலுவலங்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வதை தெரிந்து கொண்டு, அதன் மூலம் கடந்த ஓராண்டாக சிறு முதலீட்டில் வியாபாரத்தை தொடர்ந்து வருகிறார்.
அருள்மொழி கூறியதாவது: கடந்தாண்டு இ- மார்க்கெட்டிங்கில் பதிவு செய்தேன். மதுரை பாரதிய மகிளா வங்கியில், முத்ரா திட்டத்தில் விண்ணப்பித்து, 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றேன். கடந்த ஜனவரி-யில், முதல் ஆர்டர் டில்லியில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் இருந்து கிடைத்தது. தொடர்ந்து ஸ்டாம்ப் பேடு, பேனா, பென்சில், பேப்பருக்கு ஜனாதிபதி அலுவலகம், உள்துறை, நிதித்துறை, ராணுவ அலுவலகங்களில் இருந்து ஆர்டர் வந்தது.
அப்போது, ஒரு நாள் பிரதமர் அலுவலகத்தில் தெர்மோ பிளாஸ்க் தேவையை தெரிந்து கொண்டேன். பதிவு செய்த சில நாட்களில், எனக்கு ஆர்டர் கிடைத்தது. மகிழ்ச்சியால் தலைகால் புரியவில்லை. உடனடியாக பிளாஸ்க் வாங்கி, அப்படியே ஆங்கிலத்தில் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் எனது கிராமத்தையும், இரண்டு குழந்தைகளை படிக்க வைக்க உங்களின் முத்ரா திட்டம், இ- மார்க்கெட்டிங் எப்படி உதவுகிறது என்பதை பற்றியும், விளக்கினேன்.
பிரதமர் அலுலகத்திற்கே ஒரு கிராமத்து பெண்ணால் தொடர்பு கொண்டு பொருட்களை விற்க முடிகிறது என்பதை பற்றி விரிவாக எழுதினேன். இந்த கடிதத்தை படித்த பிரதமர் ஆச்சரியப்பட்டுள்ளார். கடிதம் குறித்து பிரதமர் அலுவலத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
அதன் பின்பு ஜூன் 25ல் பிரதமர் என்னைப் பற்றி வானொலியில் பேசினார், அதை நானும் கேட்டேன். பிரதமர் என்னை பாராட்டினார் என்பதை இப்போது நினைத்தாலும் நம்பவே முடியவில்லை. வாழ்க்கையில் இது எனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருந்தாலும், என்னைப் போன்ற பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சிறப்பு, என்றார்.