இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, மூன்றுநாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். தொடர்ந்து, குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார் கோத்தபய ராஜபக்ஷே.
தொடர்ந்து, டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே ஆகிய இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இவர்களின் சந்திப்பு, சுமார் 2 மணி நேரம் வரையில் நீடித்தது. அப்போது, இலங்கைக் குண்டு வெடிப்பு சம்பவம், இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர்கள் பிரச்னை, இருநாட்டு உறவு, பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இலங்கையின் வளர்ச்சிக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியளித்து உதவுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதில், இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்னர், மோடியும் கோத்தபயவும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “ இலங்கையும் இந்தியாவும் ஒரு வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கு மிகவும் அருகில் உள்ள நாடு என்பதன் அடிப்படையில், இலங்கை உடனான எங்கள் உறவுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ராணுவரீதியாக இலங்கையுடன் இணைந்து இந்தியா செயல்படும். இலங்கையில் நடக்கும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட, அந்நாட்டுக்கு 50 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக 400 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வீட்டுத் திட்டத்தின்கீழ், இலங்கையில் ஏற்கெனவே 46,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழ் மக்களுக்காக மேலும் 14,000 வீடுகள் கட்டித் தரப்பட உள்ளன. இலங்கை மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். இரு நாடுகளுக்கும் இடையே கடல்வழி வணிகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை அரசு அந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வழங்கும் என நம்புகிறேன்” என்றார் பிரதமர் மோடி.