இந்தியாவில் தொழில் துறையில் முன்னேறியுள்ள மாநிலங்களில் தமிழகத்திற்கு முதல் மூன்று இடங்களுக்குள் நிரந்தரமான இடம் உள்ளது. 50% மேல் நகர்மயமான மாநிலம் நமது. இதுவரை வளர்ச்சியின் குறியீடுகளாக இவையனைத்தும் பார்க்கப்பட்டன, ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் முறையற்ற வளர்ச்சி என்றும் நீடித்து நிலைக்காது என்பதை பல ஆண்டுகளாகவே அனேக மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகத்தில் நடைபெற்ற, நடைபெறும் பல சுற்றுச்சூழல் போராட்டங்கள் அந்த வட்டாரளவில் மக்களிடம் சென்று சேர்ந்தன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
கோவை மேட்டுப்பாளையம் அருகில் இருந்த விஸ்கோஸ் ஆலைக்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய அளவில் நடந்து 90களில் ஆலையை மூடுவதற்கான உத்தரவை பெற்றுத் தந்தது. அந்த பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய பவானி ஆற்றில் கலந்த விஸ்கோஸ் ஆலையின் கழிவுகள், மக்களை வீதிக்கு வந்து போராடவைத்தன. தமிழகத்தில் வெற்றி பெற்ற முக்கியமான சுற்றுச்சூழல் போராட்டமாக அது அமைந்தது, கேரளாவில் 70களிலேயே “அமைதிப்பள்ளத்தாக்கு போராட்டம்” பெரிய அளவில் நடைபெற்று உலக கவனத்தை ஈர்த்ததையும் நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
ஆற்று மணலின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட மக்கள் ஆங்காங்கே மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தார்கள். இது ஏதோ தனியொரு சம்பவமாய் நடக்கவில்லை. தமிழகத்தில் பல பகுதிகளில் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தது.
மணல் மாபியாக்களின் கொடூரங்கரங்களால் வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அதே அளவில் கடற்கரை மணல்கொள்ளைக்கு எதிராகவும் மக்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினர். 90களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராகவும் மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த எல்லா போராட்டங்களும் அந்தந்த காலகட்டங்களில் முக்கியத்துவத்தையும் கவனத்தையும் ஈர்த்தன.
2011ஆம் ஆண்டு புகுஷிமா விபத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் திரள் போராட்டம் உலக கவனத்தை குவித்தன. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நடத்திய வன்முறையற்ற அறப்போராட்டம் இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது. வரையறுக்கப்பட்ட எல்லைகள் இல்லாத அரசமைப்புகளை எளிய விளிம்புநிலை மக்கள் கேள்வி கேட்கமுடியும் என்று பறைசாற்றிய போராட்டம் அது. மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்தரமுடியாத அரசு துறைகள் அமைதியாக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தின. தேசத்துரோக வழக்குகளை ஏவின, சொல்லமுடியாத துயரங்களுக்கு மக்களை ஆட்படுத்தின.
கூடங்குளம் அணு உலைகள் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்கள், சுற்றுச்சூழல் குறித்த விவாதங்களை மைய நீரோட்ட வெளிக்கு கொண்டு வந்தன. கூடங்குளம் போராட்டத்திற்கு பிறகுதான் அரசியல் கட்சிகள் மக்களின் வாழ்வாதார போராட்டங்களை நோக்கி பார்வையை செலுத்தின. அதன்பிறகு நடைபெற்ற மீத்தேன், ஹைட்ரோகார்பன், கெயில் எரிவாயு குழாய், நியூட்ரினோ திட்டம் எதிர்ப்பு போராட்டங்கள் மாநிலம் முழுவதும் தேசம் முழுவதும் விவாதப்பொருளாக்கின. பெருந்திரளான மக்கள் போராட்டங்கள், பெரிய கட்சிகளை இதுகுறித்த நிலைப்பாடுகளை எடுக்கவைத்தன. மக்கள் போராட்டங்கள் தந்த அழுத்தம் அது.
தமிழகத்தில் மட்டும் ஏன் எதற்கெடுத்தாலும் போராடுகிறார்கள்?
நூறு நாட்களுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அரசு மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்தி 13 பேரை சுட்டுக்கொன்றிருக்கிறது. இவ்வளவு உயிர்பலிகளை கொடுத்தபிறகு அந்த ஆலையை மூடுவதாக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில்மட்டும் எதற்கெடுத்தாலும் போராடுகிறார்கள் என்று ஒன்றியத்தில் ஆளும் அரசுகளும் சில அறிவுஜீவிகளும் தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகிறார்கள். குஜராத்தில் அணு உலைகள் வேண்டாம் என்று போராட்டம் நடத்தியதால் மித்திவிர்தியில் அணு உலைகளை அமைக்கப்போவதில்லை என்று அந்த மாநில முதல்வர் சட்டமன்றத்தில் அறிவிக்கிறார், ஆனால் கூடங்குளத்தில் மக்கள் போராடினால் மேலும் நான்கு உலைகள் அமைக்கப்படும் என்று அரசு அறிவிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஸ்டெர்லைட் ஆலையை விவசாயிகளின் போராட்டங்களுக்கு செவிசாய்க்கும் அரசுகள், அதே ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக மக்கள் போராடினால் துப்பாக்கிச்சூடு நடத்தி பதிமூன்று உயிர்களை காவுவாங்குகிறார்கள். அணு உலைக் கழிவுகளை கோலார் தங்கவயலில் கொட்ட அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்த தேசிய கட்சிகள், அதே கழிவுகள் கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்று அறிவித்தால் அமைதியாக இருக்கின்றன.
இதை எப்படி பார்ப்பது? நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டுப் போராடினால் உச்சநீதிமன்றத்தை கைகாட்டும் ஒன்றிய அரசு, அதே உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் அமைக்கவேண்டும் என்று உத்தரவிட்டதை எப்படி எதிர்கொண்டது என்று எல்லோருக்கும் தெரியும். இவை அனைத்தும், தமிழக மக்களுக்கு ஒன்றை தெரிவிக்கின்றன, தமிழக மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடதான் வேண்டும், ஒன்றிய அரசு ஒருபோதும் தமிழர்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது என்பது திட்டவட்டமாகிறது. அதனால்தான் வாழ்வாதாரங்களை காப்பதற்கான போராட்டங்கள் தமிழகத்தில் அதிக அளவில் நடைபெறுகின்றன.
தமிழகம் போராடியது இந்தி கூடாது என்பதற்காக அல்ல, இந்தி தன் மீது திணிக்கப்பட்ட கூடாது என்பதற்காக. எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான, அசலான பன்மைத்துவ வளர்ச்சிக்கு எதிரான எந்த திணிப்பையும் தமிழகம் போராட்டங்கள் மூலமாகவே எதிர்கொள்ளும்.
- நன்றி
பிபிசி