இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று!

இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று!

இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று!

`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று(அக்டோபர்- 5).

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர். சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்.

இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன் பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.

தன் வாழ்வின் பெரும் பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவு நெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகைய உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

இராமலிங்க அடிகள் கொள்கைகள் :

1) இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்
2) எதிலும் பொது நோக்கம் வேண்டும்
3) எந்த உயிரையும் கொல்லக்கூடாது
4) எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
5) சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது
6) பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
7) புலால் உணவு உண்ணக்கூடாது
8) கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
9) சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது
10) மத வெறி கூடாது

வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் :

1) நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
2) தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
3) மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
4) ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
5) பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
6) பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
7) இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
8) குருவை வணங்கக் கூசி நிற்காதே
9) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
10) தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே

எம்மத நிலையும் நின் அருள்

நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ? செம்மல் உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர்ஆற்றேன் இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன் எந்தாய் —திருவருட்பா, ஆறாம் திருமுறை ,3639
அதாவது எந்த சமயத்தின் நிலைப்பாட்டையும், எல்லா மத நெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்கிறார்.

‘எங்கெங்கு இருந்து ஏதெது வேண்டினும்
அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி’
என்று அனைவருக்கும் அருள்புரியும்படி பரம்பொருளை வேண்டிய வள்ளலார் சுவாமிகள் அவதரித்த தினம் இன்று.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>