தொப்பூர் அருகே கால்நடைகளின் நோய் தீர்த்த சன்னியாசி நடுகல்லை வரலாற்று ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். தர்மபுரி அருகே தொப்பூர் பகுதியில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான சந்திரசேகர் மற்றும் அவரது குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன் தொப்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில், சாக்கடையின் மேல் காணப்பட்ட ஒரு கல்லை அவர் பார்வையிட்டார். அதை வெளியே எடுத்து ஆய்வு செய்தபோது சன்னியாசி நடுகல் என்பது தெரியவந்தது. ஏற்கனவே தொப்பூரில் பாண்டியர், திப்பு சுல்தான் கால நாணயத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அண்மையில் தாய் தெய்வ வழிபாட்டு சின்னம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சன்னியாசி நடுகல் ஒன்று கிடைத்துள்ளது.
வரலாற்று ஆய்வாளர் சந்திரசேகர் கூறுகையில், இது நடுகல் வகைகளில் ஒன்றான சன்னியாசி கல்லாகும். சமணர்கள் தமிழகம் வந்த காலக்கட்டத்தில், இங்கு கோமாரி நோயால் ஏராளமான கால்நடைகள் இறந்தன. சமண துறவிகள் தங்களின் மந்திரங்கள் மூலமும், மருத்துவம் மூலமும் நோயை கட்டுப்படுத்தி கால்நடைகளை காப்பாற்றியதாக தகவல் கூறப்படுகிறது. இப்பகுதி சார்ந்த மக்கள் அப்போது துறவிகளை கடவுளாக கருதினர். அத்துறவிகள் தங்கள் இறந்த பிறகும் கால்நடைகளை காப்பாற்றும் வகையில் மந்திர கட்டங்கள் நிறைந்த நடுகற்களை ஊரின் மத்தியில் நட்டு வைத்தனர். ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் திருவிழாவையொட்டி, அந்த சன்னியாசி கல்லுக்கு மஞ்சள் குங்குமமிட்டு, 108, 1008 என எட்டால் முடியும் எண்ணிக்கைக்கு ஏற்ப குடத்தில் நீரால் அபிஷேகம் செய்வார்கள்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
அதன்பின், கால்நடைகளை அபிஷேக நீரில் நடக்க விடுவார்கள். இதன் மூலம் தங்களின் கால்நடைகள் நோயிலிருந்து காப்பாற்றப்படும், இன விருத்திடையும் என நம்புகின்றனர். எனவே இது வளமைக்கல், மந்திரக்கல் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. துறவிகளை சன்னியாசி என்று தமிழில் அழைப்பார்கள். எனவே இக்கல் சன்னியாசிக்கல் என்றே அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் சன்னியாசி உருவத்தோடு இருப்பது அதிசயமாக உள்ளது. இக்கல்லில் தலைமுடிகள் நேராக மேல் நோக்கியவாறு காட்டப்பட்டுள்ளது. கழுத்தில் மணியும், இரு கைகளும் மேல்நோக்கிவாறும் காட்டப்பட்டுள்ள நிலையை காட்டுகிறது. இருகால்களுக்கு இடையே ஒரு வட்ட வடிவத்தில் நான்கு புறமும் ஆழம் உள்ளவாறு காட்டப்பட்டுள்ளது. இந்த உருவம் கோட்டோவிய வடிவில் உள்ளது. இதன் வலது புற காலின் அருகில் கட்டம் கட்டமாக இயந்திர வடிவில் செதுக்கப்பட்டுள்ள இரண்டு கட்டங்கள் இருக்கின்றன. மேலும் இச்சிலைகளைச் சுற்றி தெலுங்கு மொழியில் மந்திர எழுத்துக்கள் காணப்படுகிறது. இத்தகைய அரியவகை சன்னியாசி நடுக்கல்லை தொல்லியல் துறையும், அரசும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.