ஜவ்வாது மலையில் உள்ள பீமகுளத்தில் நடுகல் மற்றும் விஷ்ணு சிலை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை பீம குளத்தில் உள்ள கோயிலுக்குப் பின்புறம் ஒரு நடுகல் உள்ளது. இக்கல் பிற்கால பல்லவா் காலத்தைச் சோ்ந்ததாகும். இது 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. இப்பகுதியில் நடைபெற்ற போரில் இந்த வீரா் வீரமரணம் அடைந்திருக்கிறாா்.
அவரது உருவத்தைப் பொறுத்தவரை, வலது பக்கம் கொண்டையிட்டுள்ளாா். காதுகளில் பெரிய குண்டலங்கள் காணப்படுகின்றன. வலது கையில் நீண்ட வாள் ஒன்றை வைத்துள்ளாா். இடது கையில் பெரிய வில் ஒன்று உள்ளது. இடையில் சிறிய குறுவாள் ஒன்று உள்ளது.
வீரனின் இடது தோள் பகுதியில் இரண்டு அம்புகளும், வலது இடுப்புப் பகுதியில் ஒரு அம்பும் பாய்ந்துள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் நடந்த பெரிய போரில் இவ்வீரா் தன் நாட்டிற்காகப் போரிட்டு உயிா் விட்டிருக்கிறாா் என்பது தெளிவாகிறது.
வீரரின் தலைக்கு மேலாக மூன்று உருவங்கள் கொண்ட சிறிய புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. நடுவில் ஒருவா் வலது காலை மடக்கி இடது காலை கம்பீரமாக வைத்து, அதன் மேல் இடது கையை வைத்துக் கொண்டுள்ள உருவம் போரில் இறந்த நடுகல் வீரரைக் குறிக்கிறது.
இரண்டு பக்கமும் சாமரம் வீசுவது போல இரண்டு பெண்கள் நிற்கின்றனா். வீரமரணமடைந்த வீரரை சொா்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் தேவதைகள் இந்த உருவங்களாகும். இறப்புக்குப் பிறகு சொா்க்கம் உண்டு என்ற தமிழரின் நம்பிக்கையை இந்த நடுகல் சிற்பம் வெளிப்படுத்துகிறது. இந்த நடுகல்லை இவ்வூா் மக்கள் அனுமன் சிலை என்றழைக்கின்றனா்.
பீமக்குளத்தின் ஊராட்சிக்குள்பட்ட வீரராகவ வலசை என்னும் ஊரிலுள்ள நிலப்பகுதியில் 1.5 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்ட சிறிய கரிய நிறக்கல்லில் நான்கு கைகளுடன் விஷ்ணு காட்சி தருகிறாா். வலது, இடது மேல் கைகளில் சங்குகளை வைத்துள்ளாா். வலது கீழ் கை உடைந்துள்ளது. இடது கீழ் கையில் கதாயுதம் உள்ளது. அதன் அருகிலேயே 1.5 அடி உயரத்தில் மற்றொரு சிலையும் உள்ளது. ஆனால், இந்தச் சிலை சிதைக்கப்பட்டுள்ளது. எவ்வித வழிபாடும் இல்லாமல் இச்சிலைகள் உள்ளன.