தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள அனைத்து கல்வெட்டுகளும் திறந்த பாடப்புத்தகமாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சில கல்வெட்டுகளில் மட்டும் ஏன் ரகசியம் காக்கப்படுகிறது என வராலாற்று ஆய்வாளரும் கோயில் கட்டடக் கலைஞருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சைப் பெரியகோயிலில், இந்தி எழுத்துக்களால் ஆன கல்வெட்டு தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை ஆய்வுசெய்த கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், இதில் உள்ளவை இந்தி எழுத்துகள் அல்ல எனவும், இந்தக் கல்வெட்டு புதிதாக வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார். ஆனாலும், இது தொடர்பாக வேறு வடிவில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
இக்கல்வெட்டை நேரில் பார்வையிட்ட வரலாற்று ஆராய்ச்சியாளர் தென்னன் மெய்ம்மன், இதுகுறித்து பேசியபோது, ’’தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் ஸ்ரீவிமானத்திலும் தூண்களிலும் உள்ளன. இவைகளில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஏற்கெனவே தொல்லியல் துறையால் ஆவணங்களாக வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், திருச்சுற்று மாளிகையின் தென்மேற்குப் பகுதியில், கன்னி மூலையில் உள்ள கல்வெட்டில் என்ன இருக்கிறது என்ற தகவல் ரகசியமாகவே உள்ளது. இதுதான் தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது, இந்தி எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் இல்லை என்பது உண்மைதான். இது, மராட்டியர் ஆட்சிக்காலத்தில் வைக்கப்பட்ட பழங்கால கல்வெட்டு. இதில், மோடி என்னும் எழுத்து வடிவில் மராட்டிய மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. சரபோஜி மன்னர் ஆட்சிக்காலத்தில் ரகசியத்தை பகிர்ந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டவைதான் மோடி என்னும் எழுத்து வடிவம். இந்த கல்வெட்டில் உள்ள தகவல்களைத் தொல்லியல் துறை ஏன் ஆவணமாக வெளியிடவில்லை.
இந்தக் கல்வெட்டின் கீழே, தரையில் சில துண்டுக் கற்கள் கிடக்கின்றன. அவற்றில், தேவநாகரி வடிவிலான எழுத்து வடிவம் உள்ளது. இந்தத் துண்டுக்கற்கள் எட்டாண்டுகளாக இங்கே கிடக்கின்றன. இவை எங்கிருந்து பெயர்க்கப்பட்டவை என்பதும் இதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதுகுறித்தும் தொல்லியல்துறை ஆவணப்படுத்த வேண்டும். இவை குறித்து வெளிப்படையாக ஆவணப்படுத்தினால்தான், அப்போதைய மன்னர்களின் ஆட்சிக்காலம் எப்படி இருந்தது, பெரியகோயிலுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதுகுறித்து மக்கள் அறிந்துகொள்ள முடியும்.
உண்மையான வரலாற்றுத் தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். தஞ்சைப் பெரியகோயில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய மாபெரும் கலைப் படைப்பாகும். இது, திறந்த பாடப்புத்தகம். இங்குள்ள கல்வெட்டுகள் அனைத்தும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையான ஆவணமாக இருக்க வேண்டும். இதில் உள்ள தகவல்களை அச்சிடப்பட்ட ஒளிப்பட ஆவணமாக வெளியிட வேண்டும். இக்கல்வெட்டு குறித்து தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பிய பிறகாவது, தொல்லியல் துறை இதுகுறித்து விளக்கம் அளித்திருக்க வேண்டும். ஆனால், ஏனோ இதில் உள்ள தகவல் ரகசியமாகவே உள்ளது. எங்களைப் போன்ற ஆய்வாளர்கள் இதன் அருகில் சென்று துல்லியமாக புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்படுகிறது” என்றார்.
- விகடன்