தஞ்சை பெருவுடையார் கோயிலின் திருக்குடமுழுக்கு நிகழ்ச்சி 23 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு, மகாதீப ஆராதனையும் நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் ஆலயத்தின் குடமுழுக்கு நிகழ்வுக்கான யாக சாலை பூஜைகள் பிப்ரவரி 1ஆம் தேதி துவங்கி, பிப்ரவரி நான்காம் தேதியுடன் நிறைவடைந்தன. இதற்குப் பிறகு, அதிகாலை 4.30 மணியளவில் குடமுழுக்கிற்கான பூஜைகள் துவங்கின. 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் இந்த பூஜையை நடத்தினர்.
இதற்குப் பிறகு காலை 9.30 மணியளவில் குடமுழுக்கு நிகழ்வு தொடங்கியது. காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் இருந்து எடுக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட புனித நீர், பெருவுடையார் கோயில் விமான கலசத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும், கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதற்குப் பிறகு இவற்றுக்கு தீப ஆராதனையும் நடைபெற்றது.
குடமுழுக்கின்போது சமஸ்கிருத மந்திரங்களோடு தமிழிலும் பாடல்கள் இசைக்கப்பட்டன. திருமுறை, திருவாசகம் ஆகியவை ஓதுவார்களால் இசைக்கப்பட்டன. கோயிலில் செய்யப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் தமிழிலேயே செய்யப்பட்டன.
இதற்குப் பிறகு மாலை 6 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது.
குடமுழுக்கு விழாவிற்காக தமிழ்நாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருப்பதால் 5000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.