திருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியரும், ஈழப் போராளிகளுக்குத் தமிழ் கற்றுத் தந்தவருமான பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி முதுமை காரணமாக அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார்.
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற அவர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று , 2006 முதல் 2008 வரை ஈழத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். “ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்” என்ற நூல் அவர் ஈழத்தில் பெற்ற அனுபவங்களை நுட்பமாக விவரிக்கின்றன. வாழ்கையின் ஒவ்வொரு நாளையும் தமிழ் மொழிக்காக வாழ்ந்திட்ட பேராசிரியர், பாளையங்கோட்டை சைவ சபையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார்.
தமிழ் மற்றும் தமிழர் நலன் குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். “புத்தன் பேசுகிறான்” என்கிற இவரின் கவிதைத் தொகுப்பு மிகவும் பெயர் பெற்றவை. “இவர்தாம் பெரியார்”, “சோதிடப் புரட்டு”, “யார் இந்த ராமன்”, “மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை” உள்ளீட்ட சமூகம் சார்ந்த நூல்களையும் பேராசிரியர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் மொழியை நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததில் இவரின் பங்கு அளப்பரியது. லண்டன், இத்தாலி, கனடா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் கற்பித்துள்ளார்.
வாழ்நாள் முழுவதும் தமிழ்க் கொடை அளித்த அவர், இறப்புக்குப் பிறகு தமது உடலையும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கியுள்ளார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உலகத் தமிழர் பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.