சேலம் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேலம் அருகே, சின்னப்பம்பட்டியில் இருந்து, 7 கி.மீ., தூரத்தில் சரபங்கா ஆற்றங்கரையில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுப்பாளையம் முப்பீஸ்வரர் கோவில் உள்ளது. பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள பல கல்வெட்டுகள், சிற்பங்கள் கோவிலில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து, சேலம் வரலாற்று ஆய்வாளர்கள் ஓமலூர் சீனிவாசன், ஆசிரியர்கள் கலைச்செல்வன், பெருமாள் ஆகியோர் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.
அதில், பல்வேறு கால கட்டத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஒய்சாளர் காலத்திய கல்வெட்டில், கோவில் பூஜை கட்டளைக்கு, நிலம் தானம் வழங்கியதாக கூறப்பட்டுள்ளது. வீரபாண்டியன் காலத்து கல்வெட்டில், சித்திரை திருநாள் அமுதுபடி மற்றும் பூஜைக்காக வரியை நீக்கி நிலத்தை தானம் அளித்ததும், அதன் வருமானத்தில் பெரியேரி கரையை உயர்த்தி கட்டியது குறித்தும் கூறப்பட்டுள்ளது. பல கல்வெட்டுகள் படிக்க முடியாத நிலையில், புதர்மண்டியுள்ளது.
கோவில் எதிரில் நாட்டுக்காக உயிர்நீத்தவர்களின் நினைவாக நவகண்ட மற்றும் அரிகண்ட சிற்பங்கள் மூன்று உள்ளன. பராமரிப்பின்றி அழிவின் விழிம்பில் உள்ள கல்வெட்டு, சிற்பங்களை பாதுகாத்து, வரும் தலைமுறையினருக்கு தமிழர் வரலாற்றை தெரிந்து கொள்ள, நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.