மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோயில் ஆகும்.
ஒன்றுபட்ட உலக. த் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.
மானம் காத்த மருதுபாண்டிய மன்னர்கள் :
ஆங்கிலேயர்களுக்கு எதிரான வீர முழக்கத்தை முதலில் உரைத்தவர் வீரர் புலித்தேவன். அவரை தொடர்ந்து, திப்பு சுல்தான், வீர மருது சகோதரர்கள், போன்றவர்கள்.
இதில் குறிப்பிட்டு கூறப்பட வேண்டியவர்கள் மருது பாண்டிய மன்னர்கள். பிரிட்டிஷ்காரன் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு வேட்டையாட காட்டிற்கு சென்ற சமயம், வெறும் கைகளால் புலியை நேருக்கு நேர் நின்று கொல்லும் திறன் படைத்தவர் பெரிய மருது.
பெரிய மருது மிகப் பெரிய வீரர் நாணயத்தை சாதாரணமாக கை விரல்களால் வளைக்கும் திறன் கொண்ட மாவீரர். மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்ததோடு, ஒரு அங்குல இடத்தை கூட விட்டுத்தர மறுத்தார்கள். கப்பம் எல்லாம் செலுத்த முடியாது, வேண்டுமானால் மோதிப் பார்த்துவிடலாம் என்று எழுத்து மூலமாக ஆங்கிலேயரை போருக்கு அழைத்தவர்கள் இந்த மாவீரர்கள்.
ஆங்கிலேயரின் அதிநவீன ஆயுதத்திற்கு முன்னாள் வேல்கம்பு, வீச்சரிவாள், மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும் ஒருவனுக்கு ஆங்கிலேயரை போருக்கு வா” என்று கேட்க தைரியம் வேண்டும். அந்த தைரியம் தீரர் திப்புசுல்தானுக்கும், மருதுபாண்டிய மன்னர்களுக்கு மட்டுமே இருந்தது.
(வளரி என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவர் பெரிய மருது. தொடு வர்மக்கலையிலும் மிகப்பெரும் வல்லவராவார். பெரிய மருதுவிடம்தான் கர்னல் வெல்ஷ் என்பவர் வளரி சுற்ற தான் கற்றுக் கொண்டதாக தனது நாள் குறிப்பில் எழுதியுள்ளார்.)
ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததை காரணம் காட்டி ஆங்கிலேய அரசு மருதுகளின் மீது போர் தொடுத்தது. போரின் முடிவில் மாவீரர் சின்ன மருது ஒரு மிருகத்தை போல் வேட்டையாடப்பட்டதையும், தொடையில் காயமுற்று காலொடிந்து சிறையிலடைக்கப்பட்டதையும், கர்னல் வெல்ஷ் எனும் ஆங்கிலேய தளபதி தனது ராணுவ நினைவு குறிப்புகளில் பதிந்துள்ளார் என வரலாற்று ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ண்ன் தனது ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். 1813-ல் கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய மருது பாண்டியர் வரலாற்றிலும் இவை பற்றி விளக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மறைந்த வரலாற்று ஆசிரியர் மீ.மனோகரன் தனது மருது பாண்டிய மன்னர்கள் நூலிலும் இதை விவரித்து எழுதி உள்ளார்.
“கிஸ்தியெல்லாம் தர முடியாது. வேண்டுமானால் மோதிப்பார்த்து விடலாம்” என்று கூறுவதற்கு தைரியமும் ஆண்மையும் வேண்டும். அதுவும் வெள்ளையனின் அதிநவீன ஆயுதங்களுக்கு முன்பு எழுத்து மூலமாக கேட்பதற்கு தைரியம் வேண்டும். அது போன்றதொரு தைரியம் மருது சகோதரர்களுக்கு இருந்ததில் வியப்பேதும் இல்லை.
1801-ம் வருடம் விதியால் வெல்லப்பட்ட மருதுவின் குடும்பத்தினர் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர், பின்பு எந்த விசாரனையும் இன்றி உடனடியாக தூக்கிலிடப்பட்டனர். போர் முடிந்த நேரம் மருதுவின் குடும்ப வழியில் இருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டார்கள் . சுருக்கமாக சொன்னால் ஒரு வம்சத்தையே “மேஜர் அக்னியு” தூக்கிலிட்டு கொன்றழித்துள்ளான்..
மொத்தமாக மருதுவின் வீரர்களையும் சேர்த்து 500 பேர் தூக்கிலிடப்பட்டார்கள். இறந்தவர்களின் உடலை தலை வேறு உடல் வேறாக பிரித்து உடலை திருப்பத்தூர் வீதிகளில் உலவ விட்டுள்ளான். தலைகளை நகர வீதிகளில் வேல் கம்புகளில் செருகி பார்வைக்கு வைத்துள்ளான்.. நடந்த நிகழ்வுகளால் திருப்பத்தூரில் மக்கள் வெளிவரவே பயமுற்று இருந்துள்ளனர்.
சின்ன மருதுவை பிரத்தியேகமாக இரும்பு கூண்டு ஒன்றை தயாரித்து அதில் திருப்பத்தூர் அழைத்து வந்து அந்த கூண்டோடு தூக்கிலியிட்டுள்ளான் “மேஜர் அக்னியூ”. (அப்போது வழக்கத்திற்கு வந்த வார்த்தைதான் கூண்டோடு ஒழித்து விடுவேன் என்ற வார்த்தை.)
பின்பு சின்ன மருதுவின் மகன் துரைசாமி “தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ்” (இன்றைய மலேசியாவில் உள்ள பினாங்கு) தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 15. (தனது தந்தை சின்ன மருது தூக்கிலிடப்பட்டதையும், தனது வம்சத்தினர் அனைவரும் கொல்லப்பட்டதையும் உணர்ந்தே கைதியாக தூத்துக்குடி வந்த அந்த 15 வயது பாலகன், தனது தீவாந்திர பயணத்திற்காக விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட தருணத்தையும், அமைதியாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்பவனைப் போல் நின்ற கோலத்தையும் வாசிக்கும் எவருக்கும் கண்களில் கண்ணீரை பெருக்கெடுத்து ஓட செய்யும்.) 1802, பிப்ரவரி, 11-ல் தளபதி வெல்ஷ் துரை சாமியை நாடு கடத்த தூத்துகுடியில் கப்பலில் ஏற்றிய தருணத்தை இப்படி கூறுகிறார்.
“என் ஆத்மார்த்த நண்பர் சின்ன மருதுவின் மகனை என்னால் தப்பிக்க வைத்திருக்க முடியும், ஆனால் அவருடன் சேர்த்து மொத்தம் 72 பேரை நாடு கடத்தும் உத்தரவை பிரிட்டிஷ் அரசு எனக்கு ஆணை பிறப்பித்து இருந்ததால், பொறுப்பு அதிகாரியான என்னால் நண்பரின் மகனை தப்பிக்க வைக்க முடியவில்லை, வேறு ஒருவரின் பாதுகாப்பில் மருதுவின் மகன் இருந்திருந்தால் நிச்சயம் நான் துரைச்சாமியை தப்பிக்க வைக்க முயன்றிருப்பேன், ஆனால் என் பொறுப்பில் துரைச்சாமியை ஒப்படைத்தது திட்டமிடலா, தற்செயலா என தெரியவில்லை” என்கிறார். பின்பு 17 ஆண்டுகள் கழித்து “தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ்” தீவிற்கு சென்ற வெல்ஷ் துரைசாமி இருந்த கோலத்தைப் பார்த்து கண்கலங்கி உள்ளார். (33 வயது துரைசாமி 60 வயது கிழவர் போன்று தோற்றமளித்துள்ளார்.)
“தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ்” தீவில் வெல்ஷ் இருந்த போது ஒரு கிழவன் அவர் முன்னே வந்து நின்றிருக்கிறான். அப்போது வெல்ஷ் அவனிடம் “யார் நீ என்ன வேண்டும்” என்று மிரட்டலாக கேட்டுள்ளார். அவன் அளித்த பதிலில் தீயை மிதித்தவர் போல் மிரண்டு போய் தனது இருக்கையை விட்டு எழுந்துள்ளார். நெஞ்சே பிளந்தது போன்று தூக்கிவாரி போட்டுள்ளது.
சற்று நேரம் அவரையே உற்றுப் பார்த்த அந்த கிழவன் கண்களில் தாரை தாரையாக கண்ணீரை வழிய விட்டு, துரை”’சாமி”’யா”’ என்றுள்ளான். துடி துடித்து இருக்கையை விட்டு எழுந்த வெல்ஷ் உற்று நோக்கி விட்டு வேதனையில் துடித்துள்ளார். “துரை”சாமி” என்று அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்த தருணத்தை என் வாழ்நாளில் சாகும் வரை நான் மறக்க முடியாது” என்று தனது குறிப்பில் எழுதியுள்ளார் வெல்ஷ்.
தான் இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன் என்பது குறித்து தன் வம்சா வழியினருக்கு ஒரு கடிதம் தருவதாகவும், அதை தன் வம்சா வழியினரிடம் சேர்ப்பிக்குமாறும், துரைசாமி வெல்ஷிடம் கேட்டுள்ளார். ஆனால் தான் பிரிட்டிஷ் அதிகாரியாக வந்துள்ளதால், தன்னால் அதை செய்ய முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் அந்த உதவியை செய்ய முடியாமல் போனதை நினைத்து வெல்ஷ் வருந்தியுள்ளார்.
மறவர் சீமையை ஆண்ட மருதுவின் மகனால் ஒரு கடிதத்தைகூட அனுப்பமுடியாத கையறும் நிலைக்கு ஆளாகி நின்ற துயரமான தருனம், நிச்சயம் வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்தான். விதியின் வசத்தால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மருது சகோதரர்களை வீழ்த்தியிருக்கலாம், ஆனால் மானத்துடன் வாழ்ந்த மருது சகோதரர்களின் வீரத்தையும், புகழையும் எவராலும் என்றும், மறைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது..
மருது பாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.
முதலில் அஞ்சா நெஞ்சன் சின்ன மருது மக்கள் இதயம் துடி துடித்தது. அடுத்தது சின்ன மருதுவின் மூத்த மகன், உற்றார், உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது இப்படி மருது பாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை. கடைசியாக சின்ன மருதுவின் மகன் பதினைந்து வயது பாலகன். வயதை காரணம் காட்டி அவனை தூக்கிலிடவில்லை. ஆனால் அவன் உடல் முழுவதும் சங்கிலியால் பிணைத்திருந்தனர். கால்களில் இரும்பு குண்டை கட்டி விட்டிருந்தனர். தந்தை, பெரியப்பா, சகோதரன், பங்காளிகள் தூக்கில் தொங்கும் காட்சியை காண வைத்தது கொடுமை. அவனோடு சேர்த்து ஒரு மாவீரனையும் உடல் முழுவதும் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்தார்கள். நடக்க முடியாத அளவிற்கு இருப்பு குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் கட்டி விட்டிருந்தார்கள். இந்த வீரனை விட்டு வைத்தால், துரைச் சாமியை வெள்ளையருக்கு எதிராக உருவாக்கி விடுவான் என்ற பயம் வெள்ளையருக்கு. அதனால் அவனையும் சங்கிலியால் கட்டி நாடு கடத்த உத்தரவிட்டான் கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி. 72 பேரில் இவர்கள் இருவருக்கு மட்டும் இரும்பு குண்டுகளைப் பிணைத்திருந்தார்கள்.
அந்த வீரன் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் ஒருவர், முதன்மையானவர். மாவீரன் புலித்தேவன், மருதுபாண்டியர் காலங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் படைத் தளபதிகளாகவும் முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகவும் நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் கூறுகின்றன. ராமநாதபுரத்திற்கு ஜாக்சன் துரையைச் சந்திக்க கட்டபொம்மன் சென்ற போது, அவனோடு சென்றவர்கள் என்று, “மம்மது தம்பியும் முகம்மது தம்பியும் மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான் தர்மகுணவான் இபுராமு சாகிபும் தம்பி இசுமாலு ராவுத்தனும்…” என்று கதைப் பாடல் (பேரா.வானமாமலை பதிப்பு – 1971) கூறுகிறது. அவர்களில் முக்கியமானவராக, நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமிய வீரராக சின்ன மருதுவின் படைத் தளபதி சேக் உசேன் குறிபிடப்படுகிறார்.
தெற்கே சின்ன மருதும், ஊமைத் துரையும், விருப்பாச்சி கோபால் நாயக்கரும், தீரன் சின்ன மலையும் சேர்ந்து உருவாக்கிய திண்டுக்கல் புரட்சிப் படைக்கு யாரைத் தளபதியாக அறிவிப்பது என்று யோசித்து கொண்டிருந்தனர். ‘நானே அதற்கு தலைமை ஏற்பேன்’ என்று திண்டுக்கல் புரட்சிப்படைப் படையின் எழுச்சி மிக்க வீரராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர் இந்த சேக் உசேன் தான். வெள்ளையரை இந்த நாட்டை விட்டே விரட்ட, உருவான கூட்டுப்படையின் முதல் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு வீரம் மட்டுமல்ல விவேகமும், நாட்டுபற்று, நிர்வாகத்திறன் என்று சகல திறமையும் வேண்டும். அந்த செயலை செய்து தன்னை போராளியாக பிற்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் புகழும் அளவிற்கு உயர்ந்து நின்ற வீரர் சேக் உசேன்.
சின்ன மருது பல வெற்றிகளைக் குவிக்க பக்கபலமாக இருந்ததால் இவர் மேல் வெள்ளையருக்குக் கோபம். கடைசியாக நடந்த காளையர் கோயில் போர் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்ததற்கு சேக் உசேன் போன்ற சின்ன மருதுவின் படைத் தளபதிகளின் வீரமிக்க போராட்டமே என்று கருதினர். அதனால் போர் முடிந்ததும் சேக் உசேனை பொறி வைத்துப் பிடித்து வந்தனர். மலேசியாவிற்கு சொந்தமான பினாங்கு தீவுக்கு உடனே இவரை நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.
இரும்பு குண்டுகள் பிண்ணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச் சாமியும் கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் நகர்ந்தது. அது எங்கே போகிறது? என்றே அவர்களுக்கு தெரியாது. கப்பலில் இருந்தபடி தன் தாய் நாட்டையும் 15 வயது துரைச் சாமியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார் சேக் உசேன். துரைச்சாமிக்கு முடிந்த அளவு உதவ வேண்டும் என்று உறுதிபுண்டார். கடலிலே நாட்டுகள் பல கடந்தன.
சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேரும் இந்த தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இது எந்த இடம், இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுபவர்கள் என்றே தெரியாது. உடல் முழுதும் இரும்பு சங்கில்களால் பிணைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் நடக்கும் போது ‘கிளிங்!’ ‘கிளிங்!’ என்று சத்தம் எழுந்தது. இவர்கள் தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியோரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ளவர்கள், ‘கிளிங் கிளிங்” என்ற சத்தம் வந்ததால் இவர்களை ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்தனர். இதுவே நாளடைவில் பிற மொழியைச் சேர்ந்தவர்கள் பினாங்கு சென்ற தமிழர்கள் அனைவரையும் ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
சேக் உசேனுக்கு இரு கால்களிலும் இரும்பு குண்டுகள் இணைக்கப்பட்டிருந்தால், அவரால் சிறிது நேரம் கூட நடக்க முடியாது. என்றாலும் கடுமையான வேலைகளைக் கொடுத்து வாட்டினார்கள். சரியாக உணவு தராமல் வாட்டி வதைத்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் உணவே தராமல் சித்திரவதை செய்யத் தொடங்கி விட்டனர். எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் உணவு கூட தராமல் காலம் தள்ளியது கொடுமை. ஒரு நாள், தங்களை எந்த வெள்ளைக்கார அதிகாரி இந்தத் தீவிற்கு நாடு கடத்தச் சொல்லி உத்தரவிட்டானோ, அதே கர்னல் வெல்ஷ் துரை தன் மனைவி மக்களோடு விடுமுறையைக் கழிக்க இந்தத் தீவிற்கு வந்திருந்தான். உடன் இருந்தவர்கள் எல்லாம் வெல்ஷை பார்த்து கருணை மனு கொடுக்க சொன்னார்கள். காலில் உள்ள இரும்பு குண்டுகளை மட்டுமாவது அகற்றச் சொல்லச் சொல்லி மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள். நீண்ட மௌனத்திற்குப் பிறகு சேக் உசேன், “என் தாய் மண்ணிற்காகப் போராடியவன் நான். என்னை விடுவிக்க இந்த இழிநிலை வெள்ளையர்களிடம் போய் கெஞ்ச மாட்டேன். செத்தாலும் சாவேனே தவிர அந்தச் செயலை மட்டும் செய்ய மாட்டேன்” என்று வீராவேசமாகப் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் உணவு இன்றி, இரும்பு குண்டுகளால் நகரக் கூட முடியாமல் யாரிடமும் எதையும் யாசகமாகக் கேட்காமல் சேக் உசேனின் உயிர் அந்த பினாங்கு மண்ணில் அடங்கியது. இவர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட விஷயமே, கர்னல் வெல்ஷ் துரை, “எனது இராணுவ நினைவுகள்” என்ற நூலில் குறிப்பிட்ட பின்னர் தான் உலகிற்கே தெரியும். இனமொழி வேறுபாடின்றி தமிழ் மண்ணுக்காகப் போராடிய சேக் உசேன் போன்ற தன்மானம் மிக்க வீரர்களின் வரலாறுகள் இன்னும் அதிகளவில் வர வேண்டும். அதுவே நம் வீரமண்ணிற்கு நாம் செய்யும் வணக்கமாகும்.
வாழ்க்கைக் குறிப்பு :
இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 திசம்பர் 15 இல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 இல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்திற் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்று அனைவராலும் அழைக்கப்படலானார்.
இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புக்களில் நியமித்தார்.
சிவகங்கைச் சீமை மீட்பு :
ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.
1772 இற்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779 இல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு 1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.
ஒற்றுமை :
மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர்கள் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர்.
இளையவரான “சின்ன மருது” அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர்.
சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம் :
1801 ஜுன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.
தூக்குத் தண்டனை :
கட்டபொம்முலு தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்து, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின் தான் நின்றது.
1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு. இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர். வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்சு ஆப் வேல்சு (இன்றைய மலேசியாவில் உள்ள பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
நினைவிடம் :
மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இவர்களது நினைவுத் தபால் தலையை இந்திய அஞ்சல் துறை 2004 அக்டோபர் 23 இல் மதுரையிலும், சென்னையிலும் வெளியிட்டது.
1 Responses
Pingbacks/Trackbacks
Pingback: மருது பாண்டியரை தூக்கிலிட்ட கதை – Roar Media