சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் சார்பாக ஐந்தாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தொடங்கி, வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்த அகழாய்வு நிறைவு பெறுகிறது.
5-ம் கட்ட அகழாய்வுப் பணியானது சில நாள்களில் நிறைவு பெற உள்ளதால் பல்வே இடங்களில் தொல்லியல் ஆர்வர்களும் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் கீழடி அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில் சிவகங்கை, மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்வதால் கீழடியில் அகழாய்வுப் பணிகளில் சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. மழையின் காரணமாக அகழாய்வுக் குழிகளில் தண்ணீர் நிரம்பிவிடுகிறது.
இதனால் 2 மோட்டார்களைக் கொண்டும், வேலை ஆட்கள் பாத்திரம் போன்ற பொருள்களைக் கொண்டும் தண்ணீரை வெளியேற்றிய பின்னரே அகழாய்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனர். மழை நீரை முழுமையாக வெளியேற்றினாலும் சில ஆய்வுக் குழிகளில் பக்கவாட்டு இடங்கள் சேதமடைந்து குழிகளை நிரப்பிவிடுகிறது.
சிரமங்கள் இருந்தபோதிலும் கீழடியில் பணியாற்றும் பணியாளர்கள் தொடர்ந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்வதால் பணியாளர்கள் அகழாய்வுக் குழிகளை தார்பாய் கொண்டு மூடி பாதுகாக்கின்றனர். அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்ற பின் இரண்டு நாள்கள் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.