இலங்கையில் நடைபெற்ற கலவரங்களில் 1983ஆம் ஆண்டின் கலவரம் தமிழ் மக்களின் இதயத்தில் ஆறாவடுவை ஏற்படுத்திய கலவரமாகும். இக்கலவரத்தின் பாதிப்பு இலங்கை வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் பின்பு தான் இயக்கங்கள் பெரிதாக வளர்ந்ததும், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிட்டதும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மேற்கு நாடுகளை நோக்கி ஓடியதும் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இக்கலவரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், வியாபார இடங்கள் எரிக்கப்பட்டன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இருபத்தைந்து அகதி முகாம்கள் திறக்கப்பட்டன. கொழும்பு தீயணைப்புப் பகுதியின் குறிப்பேட்டின்படி குறைந்தது 1,003 இடங்களில் தீயணைப்பு வேலைகள் நடைபெற்றுள்ளன. இக்கலவரத்தைத் தொடர்ந்து கொள்ளையர்களிடம் இருந்து வெள்ளவத்தை காவல்துறையினரால் ஐந்து லட்சம் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட பெறுமதியான பணங்கள், பொருட்கள், ஆபரணங்கள், வேறு சொத்துக்கள் மீட்கப்பட்டன என சிங்களப் புத்தகம் ஒன்றின் குறிப்பு கூறுகிறது. அப்படியாயின் மீட்கப்படாத சொத்துக்களின் பெறுமதி எவ்வளவாக இருந்திருக்கும்?
தமிழர் வரலாற்றில் கறைபடிந்த கறுப்பு ஜீலையும், சிங்கள வெறியாட்டமும்!
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
இராணுவப் படையணி ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் மேற்கொண்டு பதின்மூன்று இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியாகவே இக்கொடுமையான கலவரம் தலைவிரித்தாடியது. நீண்டகாலமாகவே ஒரு சில அமைச்சர்கள் கலவரத்துக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தனர் என்றும் – அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு சிங்களப் பகுதியில் தமிழர்கள் வாழும் இடங்களின் விபரங்கள் எடுத்துவைக்கப்பட்டிருந்தன என்றும், பேசப்பட்டது. “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்னும் கருத்துப்பட பேசி 1977ஆம் ஆண்டின் கலவரத்துக்கு வித்திட்ட ஜே.ஆர். ஜெயவர்த்தன. இக் கலவரம் நடந்த போது மௌனம் காத்து கலவரத்திற்கு துணை போனவர் என்றே சொல்லலாம்.
யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இருப்பது திருநெல்வேலி என்னும் ஊராகும். இங்கு யாழ். பல்கலைக்கழகம், பெரியதொரு விவசாயிகள் சந்தை, வட மாகாணத்துக்கான விவசாயப் பாடசாலை, விவசாயி ஆராய்ச்சி நிலையம் போன்றவை அமைந்துள்ளன. இங்கு பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் பலாலி வீதியில் தபால் பெட்டியடி என்னும் இடமுண்டு. இங்குதான் இராணுவத்தின் மீதான நிலக்கண்ணி வெடித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மாதகல் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர், சென்னை பாதுகாப்பு அக்கடமியில் விசேட இராணுவ பயிற்சி பெற்ற 21 வயதான இரண்டாவது லெப்டினன் குணவர்த்தன தலைமையில் இராணுவ கனரக வாகனத்தில், 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் தபால் பெட்டியடியில் வந்த பொழுது விடுதலைப் புலிகளால் இயக்கப்பட்ட நிலக்கண்ணி வெடியினால் தாக்கப்பட்டனர். கண்ணி வெடியை தொடர்ந்து விடுதலைப் புலிகளால் தொடரப்பட்ட துப்பாக்கிச் சமரில் 15 பேர்களை கொண்ட இராணுவ அணியில் 13 பேர் கொல்லப்பட்டனர். கோப்ரல் பெரேரா, கோப்ரல் சுமதிபால ஆகிய இருவரும் பதுங்கித் தப்பி உயிரைக் காத்துக் கொண்டனர்.
பிரபாகரன் இந்திய சண்டே இதழின் நிருபர் அனிதா பிரதாப்புக்கு, விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர் சார்ள்ஸ் அன்ரனி இராணுவத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறியிருந்தார்.
இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் பெரும்பாதிப்பை – மாற்றத்தை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலில் பங்கு கொண்ட விடுதலைப் புலிகள் பிரபாகரன், கிட்டு, செல்லக்கிளி, அப்பையா அண்ணை, பொன்னம்மான் விக்ரர், கணேஸ், ரஞ்சன், பசீர்காக்கா, புலேந்திரன் சந்தோசம் ஆகியோராகும். இத் தாக்குதலில் செல்லக்கிளி மட்டும் புலிகளின் தரப்பில் உயிரிழந்திருந்தார்.
ஒரு நாட்டுக்கான போரில் இராணுவ மோதலும் இராணுவம் கொல்லப்படுவதும் எதார்த்தம்தான். திருநெல்வேலியில் தாக்கி கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை அரச இராணுவ மரியாதையுடன் வட பகுதியிலேயே புதைப்பது என முடிவெடுக்கப்பட்டது. “எனது வீரர்கள் நாய்கள் போல் சுடப்பட்டுள்ளனர். நாய்கள் போல் அவர்கள் புதைக்கப்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன்” என மேஜர் ஜெனரல் வீரதுங்க யாழ்ப்பாணத்தில் புதைக்கும் முடிவுக்கு இணங்க மறுத்துவிட்டார்.
பதின்மூன்று இராணுவத்தினரதும் உடல்களும் வேண்டுமென்றே பொலித்தீன் பைகளில் போடப்பட்டு விமான மூலம் இரத்மலானைக்குக் கொண்டு வரப்பட்டன. இராணுவ உயர் அதிகாரிகளால் யாழ்ப்பாணத்தில் பதின்மூன்று சவப்பெட்டிகள் எடுக்க முடியாமலா போனது? இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலை சிங்களவர்களுக்கு எதிரான தாக்குதலாக காட்டுவதற்கான மிகவும் கீழ்த்தரமான நாடகமே இராணுவத்தினரின் சிதைந்த உடல்களை பொலித்தீன் பைகளில் போட்டுக் கொழும்புக்கு கொண்டு சென்றமை. துண்டுகளாகவும், சிதறல்களாகவும் இராணுவ வீரர்களின் உடல்கள் பொலீத்தீன் பைகளில் வந்துள்ளன என்ற செய்தி தென்னிலங்கை எங்கும் பரவியது. இராணுவ அதிகாரிகள் திட்டமிட்ட செயலால் சிங்கள மக்கள் கொதித்தெழுந்தனர். உண்மையாகவே கொழும்புக்கு உடல்கள் வந்து சேர்வதற்கு முதலே நாடெங்கும் தகவல் பரவிவிட்டது. திட்டமிட்டபடி 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி 4.00 மணிக்கு இரத்மலானைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் பலாலியில் இருந்து இரவு 7.30 மணிக்குத்தான் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு இரத்மலானைக்கு வந்து சேர்ந்தது. வீணான வதந்திகள் பரவவும், மோசமான பதற்ற நிலை உருவாகவும் இந்தத் தாமதமும் முக்கிய காரணமாகும். இந்த தாமதத்தால் கனத்தை மயானத்தில் கூட்டம் நிமிடத்துக்கு நிமிடம் பெருகத் தொடங்கியது.
கனத்தை மயானத்திற்கு உடல்கள் வந்து சேரத் தாமதம் ஏற்பட்டதால் சிங்களக் கூட்டமும் காடையர்களும் வெகுண்டெழுந்தனர். காவல்துறையின் தலைமை காவல் அதிகாரி உருத்திர ராஜசிங்கம், உதவிப் பொலிஸ்மா அதிபர் எர்னஸ்ட் பெரேரா, காவலர் அத்தியட்சகர் கபூர், சார்ஜண்ட் வெலிகல ஆகியோர் இராணுவ உயர் அதிகாரிகள் முன் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டனர். இராணுவம் இதை உடனே தடுத்திருந்தால் பிரச்சினையின் வேகத்தை கொஞ்சமாவது குறைத்திருக்கலாம்.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி இரவு பொறளைச் சந்தியில் உள்ள தமிழருக்குச் சொந்தமான உணவு விடுதி ஒன்று தாக்கி நொறுக்கப்பட்டது முதல் கலவரம் ஆரம்பமாகியது. செய்திகள் காட்டுத்தீ போல் பரவியது போன்று கலவரமும் திம்பிரிகஸ்யாய, நாஹேன்பிட்டிய, கிரில்லப்பனை, அன்டர்சன் பிளட் போன்ற இடங்களுக்கு பரவி பின் கொழும்பை ஆக்கிரமித்து கொண்டது. ஜூலை மாதம் 24ஆம் தேதி அதிகாலை கலவரம் தொடங்கியமை தெரியாமல் கிருலப்பனை சந்தியில் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த தமிழர் ஒருவர் சின்னாபின்னமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதுவே இக்கலவரத்தின் முதல் கொலையாகும்.
இங்கு மிகக் கொடுமையானது சிறைக் கைதிகளை கொண்டே, தமிழ் சிறைக் கைதிகளை கொன்ற வெலிக்கடை கொலைச் சம்பவம் என்பதுடன், கொல்லப்பட்ட ஈழப்போராளிகளின் உடல்களை அவர்களது உறவினர்கள் யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் தங்கியிருந்த பி 3 என்னும் சிறைப் பிரிவிலேயே கொலைகள் ஆரம்பித்தன. அந்தப் பிரிவில் மரண ஓலங்கள் கேட்டதே தவிர எங்களால் ஒன்றையும் பார்க்க முடியவில்லை என வேறு பகுதிகளில் இருந்து தப்பிய ஈழப் போராளிகள் கூறுகின்றனர். வெலிக்கடை சிறைவாசலுக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது எச் மண்டபம். இம்மண்டபத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்களையும் அரைகுறை உயிருடன் இருந்த இளைஞர்களின் உடல்களையும் இழுத்து வந்து புத்தர் சிலையடியில் குவிப்பதை எச் மண்டபத்தின் இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக ஜெயக்கொடி பார்த்து கொண்டிருந்தார். குட்டிமணியின் உடல் இழுத்து வரப்பட்டபோது அவரின் உடலில் அசைவுகள் இருந்ததென்றும், அப்போது அவர் அரை உயிருடன் இருந்ததாகவும் ஜெயக்கொடி கூறுகிறார். புத்தர் சிலையடியில் கொண்டு வந்து போடப்பட்டதன் பின்னர் கண்கள் இரண்டும் கூரிய ஆயுதம் கொண்டு தோண்டியெடுக்கப்பட்டபோது சிங்கள கைதிகள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். இன்னொரு வெறியன் குட்டிமணியின் ஆண்குறியை வெட்டி வீசினான். ஏனைய கைதிகள் அவரின் உடலை குத்தி கிழித்தனர். சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட கைதிகள் குட்டிமணியின் இரத்தத்தை தமது உடலில் பூசிக் கும்மாளமடித்தனர். ஏனைய தமிழ் இளைஞர்களின் தலைகள் கைகள் கால்கள் என வெட்டிப் புத்தர் சிலையடியில் குவித்தனர் என்பன போன்ற தகவல்களை நேரில் பார்த்த ஜெயக்கொடி கூறினார்.
இக் கொலைகள் நடந்து கொண்டிருந்தபோது சிறைச்சாலைச் சமையல் கூடத்தின் ஒரு ஒதுக்குபுறத்தில் மறைந்திருந்த மயில்வாகனம் என்னும் 16 வயதுச் சிறுவன் ஜெயிலர் சுமித ரத்னவால் தலைமயிரில் பிடித்து இழுத்து வரப்பட்டு, கத்தியால் அவன் தலை சீவப்பட்டு கொல்லபட்டான். வெலிக்கடை சிறையின் பி 3 பிரிவிலும், டி 3 பிரிவிலும் இருந்த 35 பேர் 1983 ஜூலை 25ஆம் திகதி கொல்லப்பட்டனர்.
அன்றிரவு இக் கொலைகளை நடத்திய கைதிகள் சிறப்பு மண்டபத்தில் தங்கவிடப்பட்டு, மது வகைகளும் உணவு வகைகளும் வெளியே இருந்து வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு கொடுக்கப்பட்டு அவர்களை தட்டிக் கொடுத்தது சிறை நிர்வாகம்.
இலங்கையிலேயே மிகப் பெரிய சிறைச்சாலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையாகும். கண்டி போகம்பர சிறைச்சாலையை விட பன்மடங்கு பிரமாண்டமானதும் சிறந்த பாதுகாப்பு கொண்டதும் இச் சிறைச்சாலை. இதன் வாசலில் சிறைச்சாலை கண்காணிப்பாளரின் அலுவலகம் மற்றும் வீடு உள்ளது. இச் சிறைச்சாலையின் வெளிவாசலுக்கு வலது பக்கம் பெண்கள் சிறையுண்டு. அதற்கு பின்பக்கத்தில் சிறைச்சாலை அணையாளர் அலுவலகம் உண்டு. அதன் பின் பக்கத்தில் அமைந்திருந்தது, கொழும்பு விசாரணைக் கைதிகளுக்கான சிறைச்சாலையின் பணியாளர்கள், காவலர்களின் வீடுகள். சிறைச்சாலைக்கு அண்மையில் பொறளை காவல் நிலையம் உண்டு. இவைகளுடன் சிறைச்சாலை வாசலில் இராணுவப் பாதுகாப்பு இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஒரு சிறைச்சாலைக்குள் இவ்வளவு பெரிய கொலைகள் நடந்தது என்றால், இது அரசின் துணையோடும், உயர் அதிகாரிகளின் ஆதரவோடும் நடந்த கொலைகள்தான் என்பது பெரியதொரு புதிரில்லை.
முப்பத்தைந்து பேர் கொல்லப்பட்டு ஒரு நாள் கழிந்து, 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி அடுத்த கொலைகள் நிறைவேறின. அதில் காந்தியம் நிறுவனர் டாக்டர் இராஞ்சந்தரம் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.
இவை நடந்து பல வருடங்கள் கழிந்துவிட்டன. குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை.
ஜூலை இன்னும் தமிழர்களுக்கு கறுப்பாகவே இருக்கிறது.