விழுப்புரம் அடுத்த, திருவாமாத்துார் பம்பை ஆற்றில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த, திருவாமாத்துார் கிராமத்தில், பிரசித்தி பெற்ற, அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது, ஆற்றின் மையப் பகுதியில் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில், உறை கிணறு இருப்பது கண்டறியப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட பகுதிகளில், பல இடங்களில் உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அவற்றுள் அளவில் பெரியதும், மிகவும் கனமானதுமாக, இந்த உறை கிணறு அமைந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்திருந்த உறை கிணறு, சமீபத்தில், இப்பகுதியில் மண் எடுத்தபோது வெளிப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதையறிந்த வரலாற்று ஆர்வலர்கள், இப்பகுதியில் மேலும் மண் எடுப்பதைத் தடுத்து, உறை கிணறு, சேதமடையாமல் பாதுகாத்திருக்கிறனர். இந்த உறை கிணறு, மிகப் பெரிதாக காணப்படுகிறது. தடித்த ஓடுகளால், வளையம் போல் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. உறை கிணற்றின், 11 அடுக்குகள் மட்டும், 6 அடி உயரத்துக்கு தற்போது தெரிகிறது, மேலும் பல அடுக்குகள் மண்ணுக்குள் புதைந்து உள்ளன. இந்த உறை கிணறு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும், மிகவும் பிற்காலத்தியது எனவும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இருந்தாலும், இது வரலாற்றுத் தடயம் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. இதுபற்றி, தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைப் பாதுகாக்க, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, உறை கிணற்றின் காலத்தைக் கணித்துச் சொல்ல வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.