கீழடியில், பழங்கால நீண்ட கோட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அகழாய்வு நடந்த போது, சுவர் ஒன்று தென்பட்டது. தொடர்ந்து நடந்த அகழாய்வில், அந்த சுவர், முருகேசன் என்பவரது நிலம் வழியாக, கிழக்கு பகுதி வரை நீண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சுவரை முழுமையாக கண்டறிய, ஒரு வாரமாக அகழாய்வு நடந்தது. இது நீண்ட கோட்டைச் சுவராக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கண்டறியப்பட்ட சுவரை விட, இந்த சுவர் வித்தியாசமாக உள்ளது.
நவீன கட்டுமானம் படுக்கை வசத்தில், செங்கற்களை ஒரு வரிசையாகவும் உயரவாக்கில், ஒரு வரிசையாகவும் வைத்து, கட்டடம் கட்டியுள்ளனர்.மேலும், சுவர் சாயாமல் இருக்க, உயர வரிசை செங்கற்களுக்கு நடுவே, படுக்கை வசத்திலும், செங்கற்கள் வைக்கப்பட்டுள்ளன. சுவரின் தன்மையை காணும் போது, படைக்கலன் தங்கியிருக்கும் இடத்தின் பாதுகாப்பு சுவராக இருக்க வாய்ப்புள்ளதாக, தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.
இந்த சுவர், முருகேசன் நிலத்தில் இருந்து, கிழக்கு பகுதி வரை நீண்டுள்ளது. எனவே, அந்த நிலத்திலும், அகழாய்வை தொடரும் பட்சத்தில், சுவற்றின் முழு பரிமாணத்தையும் கண்டறிய வாய்ப்பு உள்ளது. சுவரின் முழு அளவையும் கணக்கெடுத்து, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர். உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, கிழக்குப்பகுதியில் அகழாய்வு நடத்த, நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.