மதுரை அழகர் கோவிலின் கோட்டை வாசலான அழகாபுரிக் கோட்டைக்கு வெளியே, மதுரை நகருக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது, இரு நூற்றாண்டு காலப் பழைமை வாய்ந்த அம்புபோடும் மண்டபம். அழகர்கோயில் நிர்வாகத்தின்கீழ் உள்ள இந்த மண்டபம் பல ஆண்டுகளாகச் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், அம்புபோடும் உற்சவத்துக்காக இந்த மண்டபத்தில் அழகர் எழுந்தருள்வார். ஆனால் தற்போது, மண்டபத்தின் உள்பகுதி மிகவும் சேதமடைந்திருப்பதால், மண்டபத்துக்கு வெளியிலேயே பெருமாளை நிறுத்தி உற்சவம் நடத்துகின்றனர்.
கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இந்த மண்டபத்தில் காரை பெயர்ந்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. சுற்றிலும் புதர்கள் மண்டிப்போய்க் கிடப்பதால், மண்டபம் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறிவிட்டது. குப்பைகளும் தேங்கிக் கிடக்கின்றன.
இதுகுறித்து கோயில் பேஸ்கார் கருப்பசாமி கூறியதாவது: “தொல்லியல் துறையிடம் கேட்டிருக்கிறோம். அவர்களின் ஒப்புதல் கிடைத்ததும் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கிடுவோம்” என்றார். மண்டபத்தின் விவரங்களைக் கேட்டோம். டி.சி., மாரிமுத்துவிடம் கேட்கணும் எனத் தொடர்பு கொண்டார். அவர், “ரெக்கார்டு பார்த்துத்தான் மண்டபத்தோட டீடெயில்ஸ் இருக்கான்னு சொல்ல முடியும்”.
பாரம்பர்யம் மிக்க இந்த மண்டபத்தை உடனடியாகப் புனரமைக்கச் சொல்லி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
- விகடன்