உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380-ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, தற்போதுள்ள சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக, 1639 ஆகஸ்ட் 22 ல் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் நினைவாக ஆண்டுதோறும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.
கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.
உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்றாக கருதப்படும் சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக உள்ளது. இனம், மொழி கடந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் வசிக்கின்றனர். உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னை தினத்தை சென்னை மக்கள் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்தாண்டு விழாவையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு சென்னைவாசிகள் பலர் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றனர்.