நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் நடுவே குறுக்குத்துறை முருகன் கோயில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் ஆற்றின் நடுவில் கட்டப்பட்ட இந்தக் கோயில், கடந்த 300 ஆண்டுகளாகக் கட்டுக்கடங்காத பல வெள்ளங்களை எதிர்கொண்ட போதிலும் இன்னும் உறுதி குலையாமல் இருக்கிறது.
குறுக்குத்துறை முருகன் கோயில் நீரில் மூழ்கும் சமயத்தில் அங்குள்ள உற்சவர் சிலை, சப்பரம், உண்டியல் ஆகியவற்றைக் கரையில் அமைந்திருக்கும் மேலக்கோவிலுக்கு எடுத்துச் சென்று வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எந்த வெள்ளம் வந்தாலும் மூலவர் மட்டும் அங்கேயே இருப்பார். வெள்ளம் வடிந்த பின்னர் கோயிலைச் சுத்தம் செய்து உற்சவர் சிலையைக் கொண்டுவந்து வைப்பார்கள்.
தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிவரும் வெள்ளத்தைக் கிழிக்கும் வகையில் இந்தக் கோயிலின் முன்பகுதிச் சுவர், கூர்மையான முனையுடன் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் வெள்ளம் மோதும்போது படகு போன்று கூர்மையான பகுதியின் வழியாகக் கிழித்தபடியே சென்றுவிடுகிறது. அதனால் கோயிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது தமிழர்களின் பழங்காலக் கட்டுமானத் திறமைக்குச் சான்றாக உள்ளது.
கோயிலின் மண்டபத்தினுள் புகும் வெள்ளம் மறுபகுதியில் கற்களால் கட்டப்பட்ட சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் ஜன்னல் வடிவிலான திறந்த பகுதிகள் வழியாக வெளியேறி விடுகின்றன. அதனால் வெள்ளத்துக்குள் நிற்கும் மண்டபத்தின் கட்டுமானத்துக்கு எப்போதும் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. 1992-ம் ஆண்டு ஏற்பட்ட புயலின்போது சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தபோதும் குறுக்குத்துறை முருகன் கோயிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
தற்போது தாமிரபரணி ஆற்றில் 14,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் அகத்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது குறுக்குத்துறை முருகன் கோயிலைச் சூழ்ந்தபடி தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது.
பெருமை வாய்ந்த குறுக்குத்துறை முருகன் கோயில், இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களால் கோயிலின் சிற்பங்கள் சிதைக்கப்படும் அவலம் நடக்கிறது. கோயிலின் பாரம்பர்ய பெருமை கருதி கோயில் சிற்பங்கள் உடைக்கப்படுவதைத் தடுப்பதுடன் அதைச் சரிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
விகடன்