சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 – 2015 ம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. வைகை நதியையொட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகி, உலகத் தமிழர்களின் கொண்டாட்டமாய் மாறியது.
தினம், தினம் ஒரு ஆச்சர்யம் என ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவுபெற்று, அவற்றில் கிடைத்த சான்றுகள் மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது 6 – ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 131 ஆண்டுகள் பழைமையான ஜமீன்தார் காலக் கல்வெட்டை கண்டறிந்துள்ளார் தொல்லியல் ஆர்வலர் கா.காளிராசா.
தொல்லியல் ஆர்வலர் கா.காளிராசா கூறியதாவது :
“சிவகங்கை முத்துப்பட்டி கிராமத்தை அடுத்த பாண்டியாபுரம் முனிக்கோயிலில் கிடந்த கல்வெட்டு ஒன்றை ஆய்வு செய்தோம். அக்கல்வெட்டு 131 ஆண்டுகள் பழைமையான ஜமீன்தார் கால கல்வெட்டு எனத் தெரியவந்தது.
மகமு சுந்தர பாண்டியனால் இக்கல்வெட்டு வெட்டி வைக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக அனைவரும் தந்தையின் பெயரை முன்சூட்டிக் கொள்வர். ஆனால், இவரோ தன்னை மகமு சுந்தரபாண்டியன் எனக் கூறிக்கொள்வதின் மூலம் தாயின் பெயரை முன்சூட்டி தாய்க்குப் பெருமை சேர்க்கிறார்.
பெருமாள்கோயிலில் 13-ம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் இருப்பதை இந்தியத் தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. இக்கோயிலில் கடந்த குடமுழுக்கின்போது கேட்பாரற்றுக்கிடந்த 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுகள் சிவகங்கை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை நகர் 1733-ல் அமையப்பெற்றாலும் 13-ம் நூற்றாண்டிலேயே பெருமாள்கோயில் இருந்ததை அறிய முடிகிறது. இது மகமு சுந்தர பாண்டியன் காலத்தில் பழுதுநீக்கி குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கலாம் “ என்றார்.